சென்னை: புதிய கட்சி தொடங்குவது குறித்து, நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அரசியலுக்கு வரப்போவதாகவும், தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி அறிவித்தார். பின்னர், அது கிடப்பில் போடப்பட்ட நிலையில், 3 ஆண்டுகள் கழித்து தற்போது, வரும் ஜனவரி மாதம் கட்சித் தொடங்குவேன் என்றும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி கட்சி தொடங்கும் தேதி குறித்து அறிவிப்பேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.
அதையடுத்து, தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும், தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜூன மூர்த்தியையும் நியமித்துள்ளதாக அறிவித்தார்.
இதையடுத்து, கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. மேலும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள சின்னங்கள் பட்டியலையும் ரஜினிகாந்த் ஆய்வு செய்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ரஜினி திடீரென பெங்களூரு புறப்பட்டுச்சென்று அவரது அண்ணனிடம் ஆசி பெற்றார். பின்னர் அண்ணா பட ஷூட்டிங்குக்காக ஐதராபாத் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், ரஜினி சென்னை திரும்பியுள்ளார். வரும் 12ந்தேதி அவரது பிறந்த நாள் வர உள்ளது. அன்றைய தினம் தன்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்று ஏற்கனவே அறிவித்துள்ள ரஜினி, இன்று திடீரென, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தமிழருவி மணியன், அர்ஜூன மூர்த்தி மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. தனது கட்சியின் பெயர், கொடி, சின்னம் தொடர்பாக அவர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாகவும், அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பது, கட்சியின் கொள்கைகள் தொடர்பாகவும் அவர் விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.