டெல்லி: அவசர பயன்பாட்டுக்கு, கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தி கொள்ள சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நாட்டில் 4 லட்சத்திற்கும் கீழ் தான் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் தற்போது உள்ளனர். மொத்த எண்ணிக்கையில் கணக்கிட்டு பார்த்தால் இது வெறும் 4 சதவீதம் மட்டும் தான்.
சிகிச்சை பெறுபவர்களில் 54 சதவீதம் பேர், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் டெல்லி மாநிலங்களை சேர்ந்தவர்கள். உலகம் முழுவதும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இங்கு செப்டம்பர் மாத இறுதியில் இருந்து குறைந்து கொண்டே வருகிறது.
நமது விஞ்ஞானிகள் அனுமதி அளித்தவுடன், கொரோனா தடுப்பு மருந்து அதிகளவில் உற்பத்தி செய்யப்படும். அந்த மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன.
கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்க அனுமதிக்குமாறு சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளன. இந்த நிறுவனங்களுடனும், விஞ்ஞானிகளுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி இருக்கிறார் என்று கூறினார்.