லக்னோ: விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும், அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசம் மாநிலம் கன்னுஜ் மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டிராக்டர் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், இதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி தரவில்லை.
அதையும் மீறி டிராக்டர் பேரணிக்காக லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வீட்டிலிருந்து அகிலேஷ் யாதவ் புறப்பட்டார். கட்சி அலுவலகத்துக்குச் செல்லவிடாமல் போலீசார் அவரை தடுத்தனர். ஆகையால், அகிலேஷ் யாதவிற்கும், போலீசாருக்கும் சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், போலீசாரை கண்டித்து சாலையில் அமர்ந்து அகிலேஷ் யாதவ் தர்ணாவில் ஈடுபட்டார். அதனால் போலீஸாருக்கும், சமாஜ்வாதிக் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை மோசமாகும் சூழல் உருவானதால் அகிலேஷ் யாதவை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.