ஷாங்காய்: உலகிலேயே, அமெரிக்காவிற்கு அடுத்து, நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது சீனா.
சீனாவால், நிலவை ஆய்வுசெய்ய அனுப்பிவைக்கப்பட்ட சாங்கே-5 என்ற லேண்டர், சீனக் கொடியை நிலவில் நாட்டியது.
கடந்த 1969ம் ஆண்டு, அமெரிக்காவால் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அப்பலோ-11 என்கிற விண்கலம் மூலம், முதன்முதலாக நிலவில் அமெரிக்காவின் கொடி நாட்டப்பட்டது. அதை நட்டவர் எட்வின் பஸ் ஆல்ட்ரின் என்ற அமெரிக்கர். அதற்கடுத்து, 1972ம் ஆண்டுவரை, மொத்தம் 5 அமெரிக்க கொடிகள் நிலவில் நடப்பட்டன.
அமெரிக்காவால் நடப்பட்ட கொடிகள் அப்படியே இருப்பதாக, செயற்கைகோள் மூலமாக எடுக்கப்பட்ட படங்கள் காட்டுவதாகவும் கடந்த 2012ம் ஆண்டு தெரிவித்தது அமெரிக்கா.
இந்நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையில் சீனாவும் இணைந்துள்ளது. சாங்கே 5 என்ற லேண்டரை நிலவில் நிலைநிறுத்திய சீனா, அதன்மூலம் அந்நாட்டின் கொடியை நிலவின் மேற்பரப்பில் ஏற்றியது மட்டுமல்லாமல், அதனை புகைப்படமும் எடுத்துள்ளது. இந்தப் புகைப்படத்தை சீன விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்மூலம், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிலவில் கொடியேற்றிய இரண்டாவது நாடாக சீனா வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.