சென்னை: ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ரஜினி அறிவிக்க உள்ள அரசியல் கட்சியின் மேற்பார்வையாளரான தமிழருவி மணியன் தெரிவித்து உள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து ரஜினி, இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி உள்பட சிலருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியனிடம், செய்தியாளர்கள் ஆன்மிக அரசியல் உள்பட கட்சியின் பெயர் உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு,
‘’ஆன்மீக அரசியல் என்பதை நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். ஆன்மீகத்திற்கு மதமே கிடையாது. உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்திலும் தன்னை காண்பதும், உலகத்தை உயிர்களை அனைத்தையும் தன்னுள் காண்பதுமாக எவன் இருக்கிறானோ அவன்தான் ஆன்மீகவாதி. அவனுக்கு சாதி கிடையாது. மதம் கிடையாது ; எந்த பேதமும் கிடையாது. இந்த மண்ணில் பிறந்திருக்கிற அனைத்து மக்களையும் அன்பினால் ஆரத்தழுவி அரவணைத்துக் கொள்வதுதான் ஆன்மீகம். அதைத்தான் ரஜினி செய்யப்போகிறார். ரஜினி ஒரு குறிப்பிட்ட மதத்தினை சார்ந்து செயல்படுவார் என்றோ, குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக செயல்படுவார் என்றோ, தயவு செய்து நினைக்காதீர்கள் என நீண்ட விளக்கம் கொடுத்தார்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ரஜினி கடன்பட்டிருக்கிறார். இந்த சாதிதான் அவரை ஆதரித்தது. இந்த மதம்தான் அவரின் பின்னால் நின்றது என்ற நிலைப்பாடு கிடையாது. சாதிகளை மீறி, மதங்களை மீறி ஒட்டுமொத்த தமிழ்சமூகமும் அவரை இவ்வளவு பெரிய உயரத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறது. ரஜினியும் அனைத்து மக்களுக்குமான ஆன்மீக அரசியலைத்தான் கொண்டு வருகிறார்.
நான் திரும்ப திரும்ப சொல்கிறேன். ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மத அரசியலை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் பார்க்கிறீர்கள். மத அரசியல் என்ற கண்ணாடியை கழற்றி வைத்து பாருங்கள். ரஜினி நடத்த இருப்பது ஆன்மீக அரசியல். ரஜினியின் அரசியல் அன்புசார்ந்த ஆன்மீக அரசியல், மற்றவர்களை விமர்சிக்கும் அரசியல் அல்ல. ஆன்மீக அரசியல் என்றதும் ரஜினிகாந்த் ஏதோ புதிதாக ஒன்றை கண்டெடுத்தது இல்லை.
இது காந்தியின் கண்டெடுப்பு. மகாத்மா காந்திதான் முதன் முதலில் ஆன்மீக அரசியலை அறிவித்தார். ஆன்மீகம் அரசியல் என்பதற்கு ஒரு அர்த்தத்தை சொல்கிறேன். ஒரு ஆன்மீகவாதி என்பவன் பற்றற்றவனாக இருக்க வேண்டும். சுயநலம் சாராதவனாக இருக்கவேண்டும். ஆன்மீக அரசியல் என்கிறபோது சொந்த நலனுக்கு இடமில்லை. மக்கள் நலன் ஒன்றுதான்.
மக்களை நலனை மட்டுமே மையப்பத்தி தன் நலத்தை முற்றாக மறுதளித்துவிடுகிற அரசியலுக்கு பெயர்தான் ஆன்மீக அரசியல். அதை செய்வதற்குத்தான் ரஜினி வருகிறார். திமுக, அதிமுகவின் தவறுகளை பேசி மக்களிடம் சென்று சேர வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. மற்றவர்களை விமர்சித்து தனது கட்சியை வளர்க்காமல் ஆன்மீக அரசியலை முன்னெடுப்பார்.இப்படி ஒரு புதிய பாதையில் மக்கள் நலனுக்கான புறப்பட்டிருக்கிற அவரை சரியாக புரிந்துகொண்டு மக்களிடம் கொண்டு போகிற பொறுப்பு உங்களிடம்( மீடியா) இருக்கிறது” என்று தெரிவித்தார்.
கட்சியின் முதல்வர் வேட்பாளர் பற்றிய கேள்விக்கு, முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினியோ, நாங்களோ தற்போது பேசவில்லை. முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினி ஏற்கனவே பேசியது அப்படியே நிற்கிறது என்றவர், கட்சிக்கு தேவையான அனைத்து அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். அடிப்படை கட்டமைப்பு குறித்து ஆழமாகவும், விரிவாகவும் ஆலோசித்து வருகிறோம் என்றார்.
கட்சியின் பெயர், சின்னம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் ரஜினிகாந்த் அறிவிப்பார். கட்சியின் பெயர், சின்னம் உள்பட அனைத்தையும் ரஜினிகாந்த் தான் சொல்வார் என்றார். ரஜினி கட்சி அறிவித்ததும், தமிழகத்தில் பெரெழுச்சி ஏற்படும், வாக்காளர்கள் அவரை ஆட்சியில் அமர்த்துவதுதான் அதிசயம், அற்புதம். தமிழகத்தில் ஒரு பேரெழுச்சி ஏற்படும் என்றார்.
காந்திய மக்கள் இயக்கம் குறித்த கேள்விக்கு, ரஜினி கட்சி தொடங்கியவுடன் அதனுடன் காந்திய மக்கள் இயக்கம் இணைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.