காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மின்துண்டிப்பு காரணமாக, மின் பழுதுபாக்க சென்ற இரண்டு மின்வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் அமைந்துள்ள ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில், நள்ளிரவு மின்சார வயர் துண்டிக்க பட்டுள்ளதாக மின்வாரிய அலுவலகத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து, அந்த பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் வருவதற்கு முன்பு, அதை சரி செய்ய மின்சார வாரிய ஊழியர் பாக்கியநாதன் என்பவர் அவசர அவசர ஈஞ்சம்பாக்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது தன்னுடன் தயாளன் என்ற உதவியாளர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.
மின் வயர் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததால், அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கும் என்ற நோக்கத்தில், பாக்கியநாதனும் சரி செய்வதற்கான முயற்சியில் வயல்வெளியில் இறங்கி உள்ளார். அப்போது, துண்டிக்கப்பட்ட வயரில் இருந்த மின்சாரம், வயல்வெளியில் உள்ள தண்ணீரில் பரவி இருந்தது தெரியாமல், உள்ளே சென்றதால், பாக்கியநாதனும், உதவியாளர் தயாளனும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து உள்ளனர்.
மின் வயரை சரி செய்ய சென்றவர்கள் வெகுநேரமாகியும் திரும்பாததால், தயாளனின் தம்பி கோபி அவர்களை பார்க்க சென்றுள்ளார். அப்போது, அங்கு இருவரும் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு, உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலின்பேரில் மின்வாரிய ஊழியர்களும் வந்து பார்த்தபோது, அவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பாலுசெட்டி சத்திரம் போலிஸார், அவர்களின் உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து பாலுசெட்டி சத்திரம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஊர் மக்களை பாதுகாக்க தங்களின் உயிரை மின் ஊழியர்கள் கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்வாரிய ஊழியர்க உயிரிழப்புக்கு மின்வாரியத்தின் கவனக்குறைவே காரணம் என கூறப்படுகிறது. புகார் வந்தும், அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படாததே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்த உதவியாளர் தயாளன் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்ததாகச் சொல்லப்படுகிறது.