சென்னை: “செம்மொழி நிறுவனத்தைக் கலைக்கும் முடிவைக் கைவிடுமாறு, முதலமைச்சர் பழனிசாமி மத்திய பா.ஜ.க அரசுக்கு உடனடியாக உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“இந்திய மொழிகள் ஆய்வுக்காக, மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தை, “பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா” என்ற மத்தியப் பல்கலைக்கழகமாகப் பெயர் சூட்டி, அத்துடன், சென்னையில் உள்ள “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை” இணைத்திட எடுக்கப்பட்டுள்ள மத்திய பா.ஜ.க அரசின் முடிவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் அறிஞர்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், தமிழுக்கு, செம்மொழி அந்தஸ்தைப் போராடிப் பெற்றனர். அதன் வளர்ச்சிக்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க அங்கம் வகித்தபோது, முதலமைச்சர் கலைஞர் அவர்களைத் தலைவராகக் கொண்டு, தமிழறிஞர்கள் கொண்ட அமைப்புடன், சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) உருவாக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருக்கும் வரை உயிரூட்டத்துடன் – நிதி ஆதாரத்துடன் – தமிழ்மொழி வளர்ச்சிக்காகத் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது இந்தச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம். ஆனால் அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் – பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகும் – இந்த மத்திய ஆய்வு நிறுவனம் அனைத்து வழிகளிலும், திட்டமிட்டு முடக்கப்பட்டது. நிதி கொடுக்காமல் – ஆய்வுப் பணிகள் செய்யாமல் – நிறுவனத்தின் இயக்குநர் உள்ளிட்ட அலுவலர்களை நியமிக்காமல் – கடந்த பத்தாண்டு அ.தி.மு.க ஆட்சியிலும் – ஆறு ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியிலும் – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பாழ்படுத்தப்பட்டு விட்டது.

இந்த நிறுவனத்தை ஏற்கனவே திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முயற்சியைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடும் எதிர்ப்பினால் கைவிட்டது மத்திய பா.ஜ.க அரசு. தமிழ்மொழி மீது பாசம் காட்டுவதைப் போல் பாசாங்கு செய்து நயவஞ்சகத்துடன் ஒரு வேடமும் – ஏற்கனவே இருக்கின்ற செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தைச் செயல்பட விடாமல் முடக்கி – ஒரு நிறுவனமாக இருக்கும் மொழியின் அந்தஸ்தை, ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் “துறை” என்ற அளவில் சுருக்கி, சிறுமைப்படுத்தும் இன்னொரு தந்திர வேடமும் அணிந்து, மத்திய பா.ஜ.க அரசு உள்நோக்கத்துடன் நடந்து கொள்வது கடுமையான கண்டனத்திற்குரியது. தமிழ்மொழி வளர்ச்சிக்கு, துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாத மத்திய பா.ஜ.க அரசு, அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் மாறாக, சமஸ்கிருதத்தை மட்டும் தனிப்பட்ட முறையில், சீராட்டி- தாலாட்டி மடியில் தூக்கிக் கொண்டு கொஞ்சும் இன்னொரு வேடத்தைத் தமிழக மக்கள் – தமிழ் கூறும் நல்லுலகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

தமிழகத்தின் உயிரோட்டமாக இருக்கும் மொழி உணர்வை – தமிழ் மொழி உணர்வை, இப்படி பல்வேறு அப்பட்டமான அத்துமீறல்கள் மூலம் மட்டம் தட்டி முனை மழுங்கச் செய்திடலாம்; சமஸ்கிருதத்தை விடத் தொன்மையும் வளமும் செறிவும் வாய்ந்த தமிழ்மொழியைச் சிதைத்து விடலாம்; என்று மத்திய பா.ஜ.க அரசு கனவிலும் எண்ண வேண்டாம். ஆகவே செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சென்னையிலேயே தொடர்ந்து செயல்பட்டிட உத்தரவிட்டு, இந்த நிறுவனத்தை, மைசூரில் உள்ள “பிபிவி” பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் பிற்போக்குத்தனமான முடிவினைக் கைவிட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்துப் பிரச்சினைகளிலும் அமைதி காப்பது போல், அன்னைத் தமிழ் செம்மொழி நிறுவனத்தைக் கலைக்கும் மத்திய பா.ஜ.க அரசின் இந்த முடிவையும் ஆமோதிக்காமல், முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, மத்திய அரசின் இந்த முடிவினைக் கைவிட உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தவறினால், செம்மொழியாம் தமிழுக்கு, திட்டமிட்டுச் செய்த துரோகம் ஆகிவிடும் என்பதை எண்ணிப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண்டும் என்று தெரிவிப்பது எமது கடமை!.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.