டெல்லி: விவசாயிகள் போராட்டம் குறித்த கனடா பிரதமரின் கருத்தை கண்டித்து இந்திய வெளியுறவுத் துறை அந்நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி டெல்லியில்  விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றோடு 9வது நாளை எட்டி உள்ளது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக  கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்து இருந்தார்.

உரிமைகளை பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என்று அவர் கூறியிருந்தார். அவரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

கனடா பிரதமரின் கருத்தைக் கண்டித்து இந்திய வெளியுறவுத்துறை சார்பில் அந்நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. தொடர்ந்து கனடா தூதர்  நதிர் படேலை நேரில் அழைத்தும் இந்தியா கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இது போன்ற கருத்துக்களை தெரிவித்தால் இருநாடுகளின் உறவில் பாதிப்பு ஏற்படும் என்றும் வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.