டில்லி

ஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்ட மூதாட்டி தாம் ஷாகின் பாக் போராளி பிகிஸ் தாதியின் உறவினர் அல்ல என மறுத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வேளான் சட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  நாடெங்கும் நடைபெறும் இந்த போராட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்டதாக ஒரு மூதாட்டியின் படம் வெளியாகியது.

அந்த மூதாட்டி முன்பு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டில்லியில் ஷாகின் பாக் பகுதியில் நடந்த போராட்ட போராளி பிகிஸ் தாதியின் உறவினர் என ஒரு தகவல் கிளம்பியது.  அவர் கூலிக்குப் போராடுபவர் எனவும் கூறப்பட்டது.  இதையொட்டி பிரபல இந்தி நடிகை கங்கணா ரணாவத் அந்த மூதாட்டி இந்த போராட்டத்துக்குக் கூலியாக ரூ.100 பெற்றுள்ளார் எனத் தெரிவித்தார்.

அந்த மூதாட்டியின் பெயர் மொகிந்தர் கவுர் என்பதாகும்.  75 வயதாகும் அவர் பஞ்சாபில் உள்ள பகதூர்கர் பகுதியில் ஜாண்டியன் என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர்.   கவுர் இது குறித்து  செய்தியாளர்களிடம், “நான் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி.  மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளான் சட்டங்கள் விவசாயிகளைப் பாதிக்கும் என்பதால் போராட்டத்தில் இறங்கினேன்.

நான் டில்லிக்கு வந்து போராட்டத்தில் கலந்துக் கொள்ளப் பெரிதும் விரும்பினேன்.  ஆனால் எனது வயது காரணமாகப் போராளிகள் என்னை அழைத்து செல்லவில்லை.   விவசாயிகளின் நலனை மனதில் கொள்ளாமல் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.  இந்த சட்டத்தை அரசு திரும்பப் பெற்று விவசாயிகளை தங்கள் வீடுகளுக்கு வெற்றியுடன் அனுப்ப வேண்டும்.

தற்போது வெளிவந்துள்ள எனது புகைப்படம் 2 மாதங்களுக்கு முன்பு பஞ்சாபில் நடந்த ஒரு வேளான் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் எடுக்கப்பட்டது.  நான் ஷாகின் பாக் போராளியின் உறவினர் அல்ல. இது தவறான செய்தி.  அத்துடன் நான் கூலிக்காகப் போராட்டங்களில் கலந்துக் கொள்பவர் இல்லை.  இதுவும் தவறான செய்தி.

கங்கணா ரணாவத் நான் ரூ.100 வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.  நான் பஞ்சாபிலும் அவர் மும்பையிலும் இருக்கிறோம். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததில்லை.  பிறகு எந்த அடிப்படையில் நான் ரூ.100 வாங்கிக் கொண்டு போராடுவதாக கங்கணா சொல்கிறார்?   கங்கணா விவசாய வேலைகளை செய்ய முன் வந்தால் நான் அவருக்கு ரூ.400 தரத் தயாராக உள்ளேன். பால் கறப்பது போன்ற வேலைகளையும் செய்தால் ரூ.500 கூட தருவேன்” எனத் தெரிவித்துள்ளார்..