சென்னை: புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவுமுதல் மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், இரவு முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி-நகர், கிண்டி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கி உள்ளது. அதிகப்பட்சமாக அம்பத்தூரில் 56.மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
புரெவி புயல் எதிரொலியாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ள நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்துள்ள மழை விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
அதன்படி அதிகப்பட்சமாகஅம்பத்தூரில் 56 மிமீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், சென்னை புரசைவாக்கம் பக்கத்தல் 26,80 மிமி மழை பதிவாகி உள்ளது. பெரம்பூரில் 40.20 மிமீ மழையும், அம்பத்தூரில் 56.00 மிமி மழையும், அயனாவரத்தில் 36 மிமீ மழையும், எழும்பூர் பகுதியில் 54.30 மிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
தண்டையார்பேட்டையில் 29.30 மிமீ மழை, மாம்பலம் (தி.நகர்) 23.40 மிமீட்டரும், கிண்டியில் 12.40 மழையும், ஆலந்தூர் பகுதியில் 55.40 மமீ மழையும், மைலாப்பூரில் 12.40 மிமீ மழையும், சோழிங்கநல்லூர் பகுதியில் 53.40 மிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
சென்னையில் மட்டும் மொத்தத்தில் 399.60 மிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும், சராசரியாக 36.31 மிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 செ.மீ., பரங்கிப்பேட்டையில் 26 செ.மீ., காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடியில் 25 செ.மீ., பேச்சியார்தோப்பு 20, புவனகிரி 19 செ.மீ., கொத்தவாச்சேரியில் 33 செ.மீ., லால்பேட்டையில் 29 செ.மீ. மழை பதிவானது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 22 செ.மீ., குடவாசலில் 21 செ.மீ., நன்னிலத்தில் 14 செ.மீ., வலங்கைமானில் 13 செ.மீ. மழை பதிவானது.