சென்னை
டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளைத் தீவிரவாதிகள், காலிஸ்தானியர் எனக் கூறிய பாஜகவினர் மன்னிப்பு கோர வேண்டும் என கே எஸ் அழகிரி கூறி உள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு உள்ளது. இதையொட்டி டில்லி அரியானா மாநில எல்லை உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதையொட்டி விவசாயிகளை அரியான முதல்வர் மனோகர் லால் கட்டார் தீவிரவாதிகள் எனவும் பாஜக செய்தி தொடர்பாளர் அமித் மாளவியா காலிஸ்தானியர்கள் எனவும் விமர்சித்துள்ளனர்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, “பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அகில இந்திய விவசாயச் சங்கங்களின் கூட்டுக்குழு கடந்த நான்கு நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி, அரியானா மாநில எல்லைக்கு அருகில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் புதிய விவசாயச் சட்டங்கள் புதிய உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை விவசாயிகளுக்கு அளித்திருப்பதாக மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இவ்வாறு இருக்க டிசம்பர் 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு போராடும் விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமர் விவசாயச் சட்டங்களை நியாயப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கும்போது, போராடும் விவசாயிகளுடன் எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவார்? டில்லியில் 15 கி.மீ தொலைவில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை அமித்ஷா பார்க்கவில்லை. அதே வேளையில், 1,200 கி.மீ தொலைவு பயணம் செய்து ஐதராபாத்துக்கு வருகிறார். இந்த அரசு விவசாயிகள் மீது எந்த அளவுக்கு அக்கறையாக இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன சான்று இருக்கப்போகிறது?
போராடும் விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்று சொன்ன அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரும், விவசாயிகளை காலிஸ்தானியர்கள் என்று அழைத்த பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் அமித் மாளவியாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும். பிரதமர் பேச்சு வார்த்தை என்ற பெயரில் போராட்டத்தைப் பலவீனப்படுத்தாமல் விவசாயிகளுடன் பேச வேண்டும். அதற்குப் பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். இந்த பேச்சு வார்த்தையை மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதற்கான அடித்தளமாக நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறி உள்ளார்..