சென்னை: மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் ,அரசியல் குறித்து அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். ஆனால், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று எப்போதும்போல மீண்டும் அவரது ரசிகர்களுக்கு ‘அல்வா’ கொடுத்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த ரஜினி, கடந்த 3ஆண்டுகளாகியும், உறுதியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். ஆனால், அவரது ரசிகர்களோ ரஜினி அரசியல் களத்துக்கு வந்தே ஆக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அரசியல் நிலைப்பாட்டில் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். முன்னதாக ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்திற்கு, போயஸ் கார்டன் முதல் மலர்களை வீசியும், பட்டாசு வெடித்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். நிர்வாகிகளுடனான இந்த சந்திப்பில், நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்து கொண்டுள்ளதால் இந்த சந்திப்பில்,அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்பை வெளிட்ட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஆலோசனை கூட்டத்தில், பல மாவட்ட நிர்வாகிகள், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டதை சுட்டிக்காட்டியும், ரஜினிதான் முதல்வர் வேட்பாளர் ஆகவேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்சி தொடங்குவதை தாமதப்படுத்த வேண்டாம் என்றும், ஜனவரி மாதத்திலேயே கட்சி தொடங்க வேண்டும் என்றும் என்றும் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்களுடன் உரையாற்றிய ரஜினி, தற்போதைய சூழ்நிலையில் அரசியல் கட்சி தொடங்கினால் வரவேற்பு எப்படி இருக்கும் என்றும் மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொது மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், மக்கள் மன்றத்தினர் இன்னும் கடுமையாக உழைத்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று அறிவுரை வழங்கியதுடன், பல மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை எனவும், என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர்; அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்றும் குற்றம் சாட்டினார். என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது, மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர், இதுகுறித்து தான் பலமுறை எச்சரித்தும் சிலர் என்பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை என்று கண்டித்தார்.
மேலும, அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கும் வரை பொறுத்திருங்கள், நல்ல முடிவை விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அரசியல் கட்சி குறித்து தெளிவான பதில் தெரிவிக்காமல், ரஜினி எப்போதும்போல பரபரப்பாகவும், அதிரடியாகவும் பேசியதுடன், அவரது ரசிகர்களுக்கும், மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் அல்வா கொடுத்துள்ளார் என்பது இன்றைய கூட்டத்தின் மூலம் முண்டும் வெட்டவெளிச்சமாகி உள்ளது.
அரசியலா.. ஆன்மிகமா.. முழுக்கா? இன்று மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி மீண்டும் ஆலோசனை…