மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற பஞ்சாப் விவசாயிகள் மீது அரியானா போலீசார் பலப்பிரயோகம் செய்தனர். இதற்கு பஞ்சாப் முதல்-அமைச்சர் அமரீந்தர் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“பஞ்சாப் விவசாயிகள் மீது அரியானாவில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தாக்குதல் நடந்துள்ளது. இதற்காக அரியானா முதல்-அமைச்சர் மனோகர் லால் கட்டார் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என ஆவேசமாக அமரீந்தர் சிங் தெரிவித்தார்.
“பஞ்சாப் விவசாயிகள் சட்டம்- ஒழுங்கை குலைத்து விட்டதாக கட்டார் கூறுகிறார். பஞ்சாப் விவசாயிகள் சட்டத்தை மதிப்பவர்கள்” என குறிப்பிட்ட அமரீந்தர் சிங். “தனது தவறை கட்டார் ஒப்புக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவரை நான் மன்னிக்க மாட்டேன்” என தெரிவித்தார்.
– பா. பாரதி