மும்பை: பாஜகவினர், என் குடும்பத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். தனிப்பட்ட முறையில் பேசி வருகின்றனர். அதுபோன்ற நிலைக்கு நான் தரம் தாழ்ந்து போக மாட்டேன் என்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சாடியுள்ளார்.
மகாராஷ்டிராவில் வெகுகாலமாக, பாஜகவுடன் சிவசேனா கூட்டணி அமைத்தேபோட்டியிட்டு வந்தது. அதுபோல கூட்டணி அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. ஆனால், கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவி விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் எழுந்ததால், கூட்டணி உடைந்தது. இதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைத்தது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார். இதைத்தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கூட்டணிகட்சியினருடன் ஓராண்டு காலத்தை கடந்துள்ள முதல்வர் உத்தவ்தாக்கரே, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
தனது தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து விடும் என்று அவர்கள் ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஓராண்டை கடந்துவிட்டது. ஒரு கட்சிக்கு கொள்கை முக்கியம் என்றாலும், அரசு நிர்வாகம் என்பது அதை விட முக்கியமானது. அதனால்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்கிறோம்.
ஆனால், தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று காலத்தில் முகக்கவசம் மற்றும் உடல் கவசம்(பிபிஇ) போன்றவை அளிப்பதை மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதனால், மகாராஷ்டிர அரசுக்கு சுமார் ரூ.300 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
மேலும், மாநில அரசின் பங்கான ரூ..38 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி பங்கீட்டுத் தொகை மத்தியஅரசிடம் இருந்து வேண்டியிருக்கிறது. அதுபோல ஏற்கனவே நிசார்கா புயலின் போது ஏற்பட்ட சேதத்தைத் தொடர்ந்து, மத்தியஅரசு உதவி வழங்க கோரப்பட்டது. ஆனால், மத்திய அரசு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு உதவவில்லை. நாங்கள் மத்திய அரசுடன் சுமுகமாகச் செல்ல விரும்புகிறோம் என்றவர் மேலும் பல குற்றச்சாட்டுக்களை வீசினார்.
தொடர்ந்து பேசியவர், நான் ஒரு போதும் தனிப்பட்ட முறையில் பாஜகவினரை தாக்கி பேசுவதில்லை. ஆனால், அவர்கள் எனது குடும்பத்தை வன்மத்துடன் பார்க்கிறார்கள். என்னையும், எனது குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள். நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைத்த போது கடுமையாக உழைத்ததால்தான் அவர்களால் வெற்றி பெறமுடிந்தது என்பதை மறந்துவிடடார்கள். நான் பாஜகவினர் மாதிரி தரம் தாழ்ந்து போகமாடேடேன்.
இவ்வாறு அவர் கூறினார்.