சென்னை: நீட் தேர்வை அறிமுகம் செய்ததற்கு காங்கிரஸ், திமுக கூட்டணியில் நடைபெற்ற மத்திய ஆட்சி தான் காரணம் என்ற அதிமுகவினரின் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டு அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் காரணமாக மருத்துவப் படிப்பில் 313 இடங்களும், பல் மருத்துவப் படிப்பில் 92 இடங்களும் ஆக 405 இடங்கள் கிடைத்துள்ளன.
ஆனால், கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 6 இடங்கள் மட்டுமே கிடைத்த அவலநிலையை பார்க்கிற போது, இது மிகுந்த மன ஆறுதலை தருகிறது. இதற்காக நடத்தப்பட்ட நீண்ட நெடிய போராட்டங்களால் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் நியாயமான நீதி கிடைத்திருக்கிறதா என்று ஆய்வு செய்கிற போது மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.
நடப்பாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 8.41 லட்சம். இதில் 3.44 லட்சம் பேர், அதாவது, 41 சதவீதம் பேர் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள். தமிழகத்தில் உள்ள 25 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,400 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள 3,400 இடங்களில் 405 இடத்தில் தான் அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்காக தமிழக அரசியல் கட்சிகள், தமிழக அரசு, தமிழ்ச் சமுதாயம் என அனைத்துப் பிரிவினரும் எத்தகைய போர்க்கோலம் பூண்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை நினைக்கும் போது மிகுந்த வேதனையே ஏற்படுகிறது.
தமிழகத்தில், நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் உரிய பலனை பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம்? நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு எது காரணம்? இதுகுறித்து பாரபட்சமற்ற முறையில் அணுகினால், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருக்கிற கல்விமுறையைத்தான் குற்றஞ்சாட்ட வேண்டியிருக்கிறது. தமிழக கல்விமுறையின் காரணமாக வழங்கப்பட்டுள்ள பாடத் திட்டத்தில் பயில்கிற மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு யார் பொறுப்பு? இதற்கான பொறுப்பை தமிழக ஆட்சியாளர்கள் ஏற்க வேண்டாமா?
கடந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 412 இலவச பயிற்சி முகாம்கள் திறந்து வைக்கப்பட்டன. இதில் 19 ஆயிரம் மாணவர்கள் இலவச பயிற்சி பெற்றனர். ஆனால், இவர்களில் ஒருவர் கூட நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனதற்காக அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டாமா? குறைந்தபட்சம் கல்வியமைச்சர் தமது பொறுப்பில் இருந்து விலகியிருக்க வேண்டாமா? இத்தகைய அவலநிலை ஏற்பட்டதற்காக அடிப்படை காரணம் குறித்து தமிழக ஆட்சியாளர்கள் சிந்தித்தார்களா? தமிழகத்தில் கல்வியின் தரத்தை உயர்த்த எடுத்த நடவடிக்கைகள் என்ன?
தமிழகத்தில், நீட் தேர்வை அறிமுகம் செய்ததற்கு காங்கிரஸ், திமுக கூட்டணியில் நடைபெற்ற மத்திய ஆட்சி தான் காரணம் என்று அதிமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம்? நீட் தேர்வு நடத்துவதற்கான அவசர சட்டம் 24.5.2016 அன்று பாஜக அரசால் பிறப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, 5.8.2016 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. அன்றைய தினம் மக்களவையில் அதிமுகவுக்கு 39 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களும் இருந்தனர். நீட் தேர்வை எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு மட்டுமே செய்தனர். எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை. அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார் என்பதை எவரும் மறந்திட இயலாது.
நாடாளுமன்றத்தில் நீட் மசோதா நிறைவேறுவதற்கு மறைமுகமாக ஆதரவு காட்டிய அதிமுகவின் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, நீட் தேர்வுக்கு ஓராண்டு காலம் விலக்கு பெற்றார். அதனால், 2016 கல்வியாண்டில் நீட் தேர்வு நடத்தப்படவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-18 கல்வியாண்டில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை.
நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்கள் 2015-16 இல் 456 மாணவர்களும், 2016-17 இல் 438 மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் சேருகிற வாய்ப்பை பெற்றனர். ஆனால், நீட் தேர்வு அறிமுகமானதற்கு பிறகு 2017 இல் 7 மாணவர்களும், 2018 இல் 5 மாணவர்களும், 2019 இல் ஒரே ஒரு மாணவர் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்தது.
இத்தகைய அவலநிலையில் இருந்து தமிழக மாணவர்களை மீட்பதற்காகத் தான் எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு தமிழக சட்டப்பேரவையில் செப்டம்பர் 15 ஆம் தேதி அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குகிற மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த மசோதாவுக்கு 40 நாட்களுக்கும் மேலாக ஒப்புதல் தராமல் தமிழக ஆளுநர் மறுத்து வந்ததை, தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் மறக்காது.
இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் அரசு 10 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கி, அரசாணை பிறப்பித்ததை அறிந்த தமிழக அரசும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்தது. அதற்குப் பிறகுதான் வேறு வழியில்லாமல் தமிழக ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார்.
இத்தகைய நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஓரளவு நீதியும், நியாயமும் கிடைத்திருக்கிறது. இத்தகைய அவலநிலை தமிழக மாணவர்களுக்கு ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் மத்திய பாஜக அரசும், அதை தடுத்து நிறுத்தத் தவறிய அதிமுக அரசும் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம்”.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.