டெல்லி: மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 3வது நாளாக தொடர்கிறது. டெல்லி புராரி மைதானத்தில் மூட்டை மூடிச்சுகள், பாத்திரங்கள் மற்றும் உணவுப்பொருட்களுடன் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். விவசாய சட்டங்களை திரும்ப வலியுறுத்தி நடத்தப்படும் இந்த போராட்டம் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது, டெல்லி சலோ என்ற பெயரில் தலைநகரை முற்றுகையிடும் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தலைநகர் டெல்லியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களிலும், நடந்தும் டெல்லியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை முதலில் அனுமதி அளிக்காத நிலையில், அரியானா மாநில எல்லைகளில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஆனால் விவசாயிகள் தடையை மீறி டெல்லியை நோக்கி புறப்பட்டதால், விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். இதனால் எல்லையில் பதற்றம் உருவானது. வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், டெல்லிக்குள் செல்ல காவல்துறை அனுமதி மறுத்தது. அதையடுத்து, டெல்லி புராரி பகுதியில் உள்ள நிரான்காரி மைதானத்தில் விவசாயிகள் குவிந்து வருகின்றனர். டிராக்டர் மற்றும் வாகனங்களில் வரும் விவசாயிகள் சுமார் ஒரு மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களுடன் மற்றும் உடமைகளுடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லிக்குள் நுழையும் வாகனங்கள் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டே அனுமதிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து, டெல்லியில் காவல்துறையினர், ரிசர்வ் போலீஸ் படையினர், துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், போராட்டத்தை கைவிடும் படி கேட்டுக் கொண்ட மத்திய வேளாண்துறை அமைச்சர் வரும் 3ம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளார்.