சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையால் கடந்த 8 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், உயர்வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையிலி, தமிழகத்தில் மட்டும், மாணாக்கர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் வகையில் பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டு உள்ளத. இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்க மாநில அரசு அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நாளை மறுநாள் அறிக்கை வழங்கப்படும் என்று தெரிவித்தவர், அதையடுத்து, இன்னும் 5 நாளில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்.
மேலும் அரையாண்டு தேர்வுகள் குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது. அதற்கான வாய்ப்பு இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
மேலும் அதிமுக பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தது, அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறுவது மக்கள் கையில்தான் உள்ளது என்றார்.