புதுடெல்லி:
லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
கரூர் நகரத்தில் பதிவு அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவரும் லட்சுமி விலாஸ் வங்கி கடந்த 1926-ல் உருவாக்கப்பட்டது.
தமிழகம் உட்பட 16 மாநிலங்களிலும்,3 யூனியன் பிரதேசங்களிலும் 563 கிளைகளுடன் பல பகுதிகளில் கடந்த 94 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிகளவிலான வராக்கடன், இயக்குநர்கள் இடையே கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கி கடந்த சில மாதங்களாக கடும் சிக்கலில் இருந்தது. இதனால், லட்சுமி விலாஸ் வங்கியின் செயல்பாட்டுக்கு 17.11.2020 முதல் 16.12.2020 வரை நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.
இதனால், வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து டிச.16, 2020 வரை அதிகபட்சமாக ரூ.25,000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது என அறிவித்தது.
மேலும், லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரைத் தலைமையமாகக் கொண்டு செயல்படும் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்தையும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்று அறிவித்துள்ளது. இணைப்பின் அடையாளமாக முதல்கட்டமாக டிபிஎஸ் வங்கி ரூ.2500 கோடி பணத்தை லட்சுமி விலாஸ் வங்கியில் செலுத்தும்.
சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ், ரிசர்வ் வங்கி ஒப்பந்தத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை தன் வசப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நெருக்கடியில் உள்ள இந்திய வங்கியை மீட்டெடுக்க அதனை ஒரு வெளிநாட்டு வங்கியுடன் இணைப்பது நாட்டிலேயே இது முதல்முறை.
டிபிஎஸ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கியின் 563 கிளைகள், 974 ஏடிஎம்கள் மற்றும் சில்லறைக் கடன்களில் 1.6 பில்லியன் டாலர் உரிமையை எடுத்துக்கொள்ளும்.