டெல்லி: குஜராத் பாஜகவின் கோட்டையை தகர்த்து, அங்கு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சியின் கொடியை நாட்டியவர்  ராஜீவ்காந்தியின் நம்பிக்கைக்குரிய அகமது படேல். இவர் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிக்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நம்பிக்கைக்கு உரியவரும், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராகவும் திகழ்ந்தவர் அகமது படேல்.  இவர் குஜராத்தில் உள்ள பரூச் மாவட்டத்தில் இருக்கும் பிராமல் எனும் கிராமத்தில் 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று பிறந்தார்.. அவரது தந்தையின் பெயர் முகமது இசாக் படேல். தாயின் பெயர் ஹவபென் படேல்.  காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்த அகமது படேல் சோனியா காந்திக்கு அரசியல் ஆலோசகராக இருந்த போது கட்சியில் மிகவும் சக்தி வாய்ந்தவராக விளங்கினார்.
1985ம் ஆண்டு ராஜீவ்காந்திக்கு அவர் நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றினார். 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள அகமது படேல், பரூச் தொகுதியில் இருந்து மூன்று முறை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும்,  5 முறை மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கு 28 வயதாக இருந்தபோது பரூச் மக்களவைத் தொகுதியில் இவரைப் போட்டியிட வைத்தார் இந்திரா காந்தி. பின்னர் 1980 மற்றும் 1984 தேர்தல்களிலும் அங்கு மீண்டும் போட்டியிட்டு வென்றார். 1984இல் அகில இந்திய காங்கிரசின் துணைச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் அகமது படேல். பின்பு 1986 ஆவது ஆண்டு குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1988இல் காந்தி -நேரு குடும்பத்தார் நடத்தும் ஜவகர் பவன் அறக்கட்டளையின் செயலாளர் ஆக்கப்பட்டார்.
இதன் பின்பு காந்தி – நேரு குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக உருவானார் அகமது படேல்.  ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தபோது அவருக்கு எவ்வளவு நம்பிக்கைக்குரியவராக இருந்தாரோ அதே அளவு நம்பிக்கைக்குரியவராக சோனியா காந்திக்கும் அவர் இருந்ததாகவே பார்க்கப்பட்டார். கடைசியாக. , அகமது படேல் 2017ல் மாநிலங்களவைக்கு தேர்வானார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறியவர்களின் நெருக்கடியால், வழக்கமாக போட்டியின்றித் தேர்வாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, பல ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு நடந்தது. பல ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று அகமது படேல் மாநிலங்களைவைக்கு மீண்டும் தேர்வானது அப்போது தேசிய அளவில் பெரிதும் பேசப்பட்டது.
மதத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர். மத வழிபாடுகளை இவர் தவற விட்டதில்லை. பேரியக்கம் சார்ந்த வேலைகளில் , இவர் நேரம் காலம் பார்ப்பது கிடையாது. இரவு 12 மணிக்கு சந்திகக அனுமதி கொடுத்திருந்தாலும் – சந்தித்து விட்டே செல்வாராம்.
வீர வணக்கம் அகமது பட்டேல் ஜி.