சென்னை: மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு கொண்டுவந்ததன் விளைவாக, குறிப்பிட்டளவு மாணாக்கர்கள் பயன்பெற்ற நிலையில், சென்னை, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் மட்டும், 7 மாணவிகள் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ இடங்களைப் பெற்றுள்ளனர்.

அதாவது, 5 பேர் மருத்துவ இடங்களையும், 2 பேர் பல் மருத்துவ இடங்களையும் பெற்றுள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், அவர்களின் பெரும்பாலானோர், தங்களின் படிப்பிற்கு பிறகு கிராமப்புறங்களில் பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் சரியான மருத்துவ வசதி கிடைக்காத காரணத்தை முன்வைத்து, இந்த விருப்பத்தை தெரிவித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

தங்கள் பள்ளி மாணவிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அசோக் நகர் அரசு மகளிர் பள்ளி முதல்வர் சரஸ்வதி, “என் மகளுக்கு மருத்துவ இடம் கிடைக்கவில்லை. ஆனால், எங்கள் பள்ளி மாணவிகளுக்கு கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி. அவர்களை எனது சொந்த மகள்களைப் போல் பாவிக்கிறேன்.

எங்கள் பள்ளியைப் பொறுத்தவரை, நடப்பு மாணவிகள் மற்றும் பழைய மாணவிகள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும், எங்களுடைய உதவியையும் வழிகாட்டுதலையும் தங்களுக்கு தேவையானது வரை பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.