இதுவரையில் நாம் பார்த்ததெல்லாம் ஏதேனும் ஒன்றை எதிர்த்து நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்கள்தாம்! ஆனால், இது ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துத் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு.
இப்போராட்டம் நான்கு நிலைகளில் நடைபெற்றது என்று சொல்லலாம். 1983ஆம் ஆண்டு வரையில் ஈழ ஆதரவுக் கூட்டங்கள், மாநாடுகள் போராட்டங்கள் ஆகியனவற்றிற்கு இந்திய அரசின் ஆதரவு, எதிர்ப்பு இரண்டும் இல்லாத நிலை இருந்தது. 1983 தொடங்கி, 87 வரையில் இந்திய அரசு, தமிழக அரசு ஆகிய இரண்டுமே போராட்டங்களை முழுமையாக ஆதரித்தன. 1987-91 காலகட்டத்தில், இப்போராட்டங்களை அரசு எதிர்த்தது, ஒடுக்கியது. 1991ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலைக்குப் பிறகு, மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே ஈழ ஆதரவுப் போராட்டங்களுக்கு எதிரான, மிகக் கடுமையான ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டன. இந்த நான்கு  நிலைகளிலும் தமிழகத்தில் நடைபெற்ற ஈழ ஆதரவுப் போராட்டங்கள் குறித்து, விரிவாகக் கூறத்தக்க செய்திகள் உள்ளன. அச்செய்திகளை உள்ளடக்கிய நூல்கள் பலவும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. சில நேரங்களில் தமிழகத்தின் ஏடுகள் அனைத்திலும், இந்திய ஏடுகளிலும் கூட, ஈழச் செய்தியே தலைப்புச் செய்தியாக இருந்தது.
பிறநாடுகளில் நடைபெற்ற போராட்டங்களுக்கு, இந்தியாவில் பல நேரங்களில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஈழ ஆதரவுப் போராட்டங்களைப் போல தமிழ்நாட்டில் நடைபெற்ற, பிறநாட்டுச் சிக்கலுக்கான ஆதரவு காட்டும் எழுச்சிமிக்க போராட்டம் வேரொன்று நடந்திருக்க வாய்ப்பில்லை. அண்டை நாடு என்பதாலும், ஈழத்தமிழர்கள் நம் தொப்புள் கொடி உறவினர் என்பதாலும், அத்தகையதொரு எழுச்சி இங்கு ஏற்பட்டிருக்கலாம். அதுகுறித்து விரிவாக நாம் பார்ப்பதற்கு முன், ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணியைச் சுருக்கமாகவேனும், அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட காலம் வரையில், பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா உள்ளிட்ட பல நாடுகளைப் போல இலங்கையும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. பிறகு, 1948ஆம் ஆண்டு, விடுதலை பெற்றுத் தனி நாடாகியது. பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை பெறுவதற்காக இலங்கையில் வாழ்ந்த சிங்களர்களும், தமிழர்களும் ஒருங்கிணைந்தே போராடினர். எனினும் விடுதலைக்குப் பிறகு, சிங்களர்களின் பெரும்பான்மை வாதம் தலைதூக்கியது. ஆனால், அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, அப்படி ஒரு நிலை வரக்கூடும் என்பதை முன் உணர்ந்து, தலைவர்கள் சிலர் தமிழ் இனத்தின் உரிமைக்காகக் குரல் கொடுத்தனர்.
சர்.பொன்னம்பலம் அருணாச்சலம்
 1918ஆம் ஆண்டிலேயே, ‘இலங்கை தேசிய காங்கிரஸ்’ என்னும் ஓர் அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. சர்.பொன்னம்பலம் அருணாச்சலம் என்பவர் அதனைத் தொடக்கிய தலைவர் ஆவார். அதிலிருந்து 1924ஆம் ஆண்டு, ஒரு பிரிவினர் தனியாகப் பிரிந்து, ‘தமிழ் லீக்’ என்னும் அமைப்பைத் தொடங்கினர். அந்த அமைப்பு மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெறவில்லை. அதனால், 1944இல் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களால், இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்னும் கட்சி நிறுவப்பட்டது. அவர்தான், நாட்டு விடுதலை குறித்து, ஆராய்வதற்காகப் பிரித்தானிய அரசால் அனுப்பப்பட்ட சோல்பரி பிரபு தலைமையிலான குழுவைச் சந்தித்து, தமிழர்களுக்கான உரிமைகள், விடுதலைக்குப் பின்பும் காப்பாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியவர். தமிழ் ஈழக் கோரிக்கைக்கான முதல் குரல் அவரிடமிருந்து வெளிப்பட்டது எனக் கொள்ளலாம். ஆனால், விடுதலைக்குப்பிறகு, அவருடைய போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. சிங்களர் அமைத்த அமைச்சரவையில் அவர் ஓர் இடத்தைப் பெற்றுக் கொண்டு, தமிழர்களுக்காகப் பேசுவதை நிறுத்திக் கொண்டார். அதன் காரணமாக இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது. தந்தை செல்வா தலைமையில் 1949ஆம் ஆண்டு இறுதியில், இலங்கைத் தமிழரசு கட்சி என்னும் ஒரு புதிய கட்சி உருவாயிற்று. இன்றும் வரலாற்றில் தனக்கென்று ஒரு தனியிடத்தைத் தக்க வைத்துள்ள கட்சி என்று அதனைக் கூறலாம்.
ஆனால், அதற்கும் முன்பே ஈழத்தமிழர்களுக்குத் தனிநாடு வேண்டும் என்று 1944இல், முதன்முதலில் குரல் கொடுத்தவர் அன்றைய தென்ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.பொன்னையா என்னும் ஒரு தமிழர் என்பது ஒரு வியத்தகு செய்தி. அவர் ஆளுநர் ஸ்டான்லிக்கு எழுதிய கடிதத்தில், ‘விடுதலை கொடுக்கும் போது, தமிழர், சிங்களர் என்னும் இரு இனத்திற்குமாகச் சேர்த்து, ஒரு நாட்டை அளித்துவிட்டு போய்விடக் கூடாது’ என்றும், ‘ஈழத்தைத் தனிநாடாக அறிவிக்க வேண்டும்’ என்றும் கோரியிருந்தார். அக்கடிதத்தின் நகலை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் பற்றிமாகரன் வெளியிட்டுள்ளார்.
இத்தகைய வாதங்கள் எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் போது, சிலோன் என்னும் ஒற்றைத் தேசத்தையே விட்டுச் சென்றனர். விடுதலை பெற்ற சில ஆண்டுகளிலேயே சிக்கல்கள் தொடங்கிவிட்டன. மலையக மக்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் வாக்குரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்டனர். சிங்கள அரசின் பொருளாதாரக் கொள்கைகளாலும் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். தொழில் மற்றும் கட்டுமானத் தொழிற்சாலைகள் அனைத்தும் சிங்களப் பகுதிக்கே அளிக்கப்பட்டன. இரும்புத் தொழிற்சாலை குருவில்லாவில் நிறுவப்பட்டது. டயர் தொழிற்சாலை களனிக்கும், கண்ணாடித் தொழிற்சாலை கல்ஓயாவிற்கும் சென்றன. அதேபோல, காகிதத் தொழிற்சாலை, பஞ்சாலைகள், உரத் தொழிற்சாலைகள் ஆகிய அனைத்துமே சிங்களர்கள் வாழும் பகுதிகளிலேயே ஏற்படுத்தப்பட்டன. மன்னார்வளைகுடா பகுதியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டாலும், அங்கு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்படவில்லை. பூநகரிப் பகுதியில் பெரிய சர்க்கரை ஆலை ஒன்றை நிறுவுமாறும், அதற்குப் பெரும் பொருளுதவியைத் தாங்கள் செய்வதாகவும், தமிழர்கள் கூறிய போதும், அரசு அதற்குச் செவிமடுக்கவில்லை. இவ்வாறு தமிழ் மக்கள் வாழும் பகுதி, பொருளாதாரத்துறையில் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க நேர்ந்தது.
இவை அனைத்தையும் தாண்டி, 1956 ஜூன் 5ஆம் நாள், அங்கு நிறைவேற்றப்பட்ட ஓர் அரசுத் தீர்மானம், தமிழர்கள் அனைவரையும் நிலைகுலைய வைத்துவிட்டது. ‘சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி’ என்னும் புதிய அரசுச் சட்டம்தான் அது. அதன்விளைவாகத் தமிழர்கள் அனைவரும், தாங்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்தனர். தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் இதனால், ஒருவிதமான அமைதியின்மை  நிலவத் தொடங்கிற்று. அந்தச் சூழலில்தான், தமிழரசுக் கட்சி பல்வேறு விதமான அறப்போராட்டங்களை முன்னெடுத்தது. அப்போராட்டங்களுக்குத் ஈழத்தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பும் கிடைத்தது. எப்போதும் மொழி என்பது, மற்ற சிக்கல்களைப் போல எளிதான ஒன்று அன்று. அது மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதைச் சிங்கள அரசு உணரத் தவறிவிட்டது.
அந்தக் காலக்கட்டத்தில்தான், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோர் தமிழகம் வந்து, தமிழர் தலைவர்களைச் சந்தித்து, தங்கள் போராட்டத்திற்கான ஆதரவைக் கோரினர். அப்போது தந்தை பெரியாரைச் சந்தித்த வேளையில், ‘நாங்களே இங்கு அடிமையாகத்தான் இருக்கிறோம். ஓர் அடிமை, இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்’ என்று கேட்டார். அந்தக் கூற்றைத்தான் இன்று சிலர், தங்கள் அரசியல் இலாபத்திற்காக மாற்றிச் சொல்கின்றனர். ஈழப் போராட்டத்திற்கு, பெரியார் ஆதரவுதர முடியாது என்று சொல்லிவிட்டார் எனக் கூறுகின்றனர். அது உண்மையன்று. உதவ முடியாது என்றுதான் பெரியார் கூறினாரே அல்லாமல், ஆதரவே தர முடியாது என அவர் ஒருநாளும் கூறவில்லை.
தந்தை செல்வா, பெரியார்
1972ஆம் ஆண்டு, இலங்கை அரசியல் வரலாற்றில், மிக முதன்மையான நிகழ்வொன்று நடந்தது. நாட்டின் பெயரும், அரசமைப்புச் சட்டத்தின் தன்மையும் முழுமையாக மாற்றப்பட்டன. 1972ஆம் ஆண்டு மே மாதம், புதிய அரசமைப்புச் சட்டத்தின்படி, சிங்கள பௌத்தர்களே அந்நாட்டின் முதன்மைக் குடிமக்கள் என்பது போன்ற ஒரு நிலை ஏற்பட்டது. கல்வித்துறையில் கொண்டுவரப்பட்ட ‘தரப்படுத்துதல்’ என்னும் திட்டமும் தங்களின் கல்வி உரிமையைப் பறிப்பதாக ஈழத்தின் மாணவர்கள் எண்ணத் தொடங்கினர். தமிழ் மாணவர் அமைப்பு என்னும் ஓர் இயக்கம் உருவாயிற்று அதன் தொடர்ச்சியாகவே இளைஞர்களை ஈர்த்த பல்வேறு போராட்டக் குழுக்கள் அடுத்தடுத்து தோன்றின. அவையாவும், அறவழிப் போராட்டத்திலிருந்து விலகி, ஆயுதம் ஏந்திய போராட்டத்தை முன்னெடுத்தன.
உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி போன்ற அறவழிப் போராட்டங்களை சிங்கள அரசு மதிக்காமல் போன காரணத்தால், சிங்களருக்கு இந்த மொழி புரியவில்லை. அவர்களுக்குப்  புரிந்த மொழியில் நாம் பேச வேண்டும் என்ற எண்ணம் ஈழத்தின் இளைஞர்களிடையே ஏற்பட்டது. வன்முறைக்கு வன்முறைதான் பதிலாக இருக்க முடியும் என்ற எண்ணம் அவர்களிடம் நிலை கொண்டது. 1970களின் தொடக்கத்தில், ஒன்றிலிருந்து இன்னொன்று, இன்னொன்றிலிருந்து வேறொன்று என்று அடுத்தடுத்து ஆயுதப் போராட்டக் குழுக்கள் பலவும் தோன்றின. அவற்றுள், தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(டெலோ), தமிழ்ஈழ விடுதலைப்புலிகள், ஈழப் புரட்சிகர அமைப்பு(ஈராஸ்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்மக்கள் விடுதலை இயக்கம்(பிளாட்) ஆகியன குறிப்பிடத்தக்கன. இவ்வமைப்புகளுக்கு முறையே சிறீ சபாரத்தினம், பிரபாகரன், பாலகுமாரன், பத்மநாபா, முகுந்தன் ஆகியோர் தலைமைப் பொறுப்பு ஏற்றிருந்தனர். இவை தவிர வேறு சில சிறு அமைப்புகளும் அங்கு தோன்றின.
ஆயுதம் ஏந்திய குழுக்களின் போர் நடவடிக்கைகளும், அவற்றை ஒடுக்க அரசு கட்டவிழ்த்துவிட்ட அரச பயங்கரவாதமும், ஈழத்தின் அன்றாட நிகழ்வுகளாயின. எந்த நேரத்தில், எது நடக்குமோ, யார் கொல்லப்படுவார்களோ என்கிற அச்சம் இருபக்கங்களிலும் பரவிற்று.
விடுதலைப்புலிகள் பிரபாகரன்
1974ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டிற்குள் புகுந்த காவல்துறை, அத்துமீறி அடக்குமுறையை ஏவியது. அதனால், சில உயிரிழப்புகளும் நேர்ந்தன. அதுகண்டு, ஆத்திரமடைந்த தமிழ் ஈழ விடுதலை அமைப்புகள் பழிக்குப் பழி வாங்க முடிவெடுத்தனர். காவல்துறையை ஏவிய, காவல்துறை அதிகாரி சந்திரசேகரா, அப்போது யாழ்நகரத்து மேயராக இருந்த தமிழ் இனத் துரோகி துரையப்பா ஆகியோரைக் கொல்வது என்று தமிழ் அமைப்புகள் முடிவெடுத்தன. அவ்வாறு சந்திரசேகராவைச் சுட்டுக்கொல்ல முயன்ற வேளையில், போராளி சிவக்குமாரன், காவல்துறையால் வளைக்கப்பட்டார். அவர்களிடமிருந்து தப்புவதற்காக சிவக்குமாரன் சயனைட் குடித்து வீரமரணமடைந்தார். இந்நிகழ்வு 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி நடைபெற்றது. அதேநேரம், மேயர் துரையப்பாவை விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன், குறிதவறாமல் சுட்டுக் கொன்றார். காவல்துறையிடமிருந்து தப்பித்தும் போய்விட்டார்.
மேற்காணும் நிகழ்வுகள் சிங்கள அரசுக்கு அச்சத்தையும், அதே நேரம் கட்டுக்கடங்காத ஆத்திரத்தையும் உருவாக்கியது. அதன்பிறகு நடைபெற்ற பல்வேறு அடக்குமுறைகளுக்கு, இயக்கங்களைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் பலியானார்கள். அரசின் கோபத்திற்கு, யாழ்ப்பாண நூலகமும் தப்பவில்லை.
யாழ்ப்பாண நூலகம்
ஈழமக்கள் கல்வியைத் தம் உயிராக பாவித்தவர்கள். கல்விக்கு உறுதுணையாக இருப்பது நூலகமே என்பதால், அதனைப் பேணிக் காத்துவந்தனர். 1934ஆம் ஆண்டு, ஏறத்தாழ ஆயிரம் நூல்களுடன் யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதியில் தொடங்கப்பட்ட நூலகம், பின்னர் பெரிதாக வளர்த்தெடுக்கப்பட்டது. 1936ஆம் ஆண்டு அது நகரசபைக் கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்தது. பிறகு 1952ஆம் ஆண்டு, எடுக்கப்பட்ட முடிவுப்படி, சொந்தமாக ஒரு பெரிய நூலகம் கட்டும் முயற்சியில் தமிழர்கள் இறங்கினார்கள். அந்த முயற்சி வெற்றி பெற்று, 11.10.1959இல், யாழ்ப்பாணத்தில் ஒரு பெரும் கட்டிடத்தில் ‘யாழ்பாண நூலகம்’ இயங்கத் தொடங்கிற்று.
அந்த நூலகத்தைதான், 1981 ஜூன் முதல் தேதியன்று, இலங்கையின் அதிபராக இருந்த ஜெயவர்த்தனாவின் நெருங்கிய சீடர், அமைச்சர் காமினி திசநாயகா, தன் சொந்த மேற்பார்வையில், சிங்களர்களைக் கொண்டு, தீ வைத்து எரித்து, நூல்கள் அனைத்தையும் சாம்பலாக்கினான். அந்த நூலகத்தில் அப்போது ஏறத்தாழ 97,000 நூல்கள் இருந்தன. அறிஞர் ஆனந்த குமாரசாமியின் அரிய ஓலைச்சுவடிகள், வன்னிய சிங்கத்தின் நூல் தொகுதிகள், கதிர்வேல் பிள்ளையின் நூல்கள், ஆறுமுக நாவலரின் நூல்கள் என அறிஞர்கள் பலரின் நூல்கள் அன்று எரிக்கப்பட்டன. அவை மட்டுமின்றி மருத்துவக் கலைக் களஞ்சியம், மேக்மில்லன் கலைக்களஞ்சியம், புவியியல் வரைபடங்கள் என்று எத்தனையோ, கிடைத்தற்கரியன அங்கிருந்தன.
தங்கதுரை, குட்டிமணி
தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்ற குறிப்பிடத்தக்க போராளிகள் கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது குட்டிமணி, ‘இந்த அரசினால் நான் கொல்லப்பட்டாலும், என் கண்களை எடுத்து யாரேனும் இரு தமிழர்களுக்குப் பொருத்துங்கள், மலரப் போகும் தமிழ் ஈழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்’ என்று கூறினார். அதற்காகவே, அவர் இருந்த வெலிக்கடைச் சிறையில் புகுந்த காடையர்கள், குட்டிமணியைக் கொன்று அவர் கண்களைப் பிடுங்கி, காலில் போட்டு மிதித்தனர். உலகிலேயே வேறெங்கும் நடந்திராத காட்டுமிராண்டித்தனம் நிறைந்த கொடிய பயங்கரவாதம் அன்றோ இது!
குட்டிமணி மட்டுமில்லை, அன்று வெலிக்கடைச் சிறையில் இருந்த போராளிகள் பலரும் கொல்லப்பட்டனர். 1983 ஜூலை 23ஆம் நாள், இரவு வெலிக்கடை சிறைக்குள் ‘சிங்களக் காடையர்கள் திட்டமிட்டு அனுப்பப்பட்டனர். அங்கிருந்த தமிழ்ப் போராளிகள், தமிழ் மக்கள் அனைவரையும் கடுமையான ஆயுதங்களால் அடித்தும், வெட்டியும் கொன்றார்கள். அந்நிகழ்வு மிகப்பெரும் அதிர்ச்சி அலைகளை ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தியது. அதன்பிறகே தமிழகத்தில் ஈழமக்களுக்கு ஆதரவான பெரும் போராட்டங்கள் தமிழகம் எங்கும், பட்டித் தொட்டிகளிளெல்லாம் கூட நடைபெறத் தொடங்கின. தமிழக அரசியல் வரலாற்றிலும் அப்போராட்டங்கள் சில தாக்கங்களையும், சில மாற்றங்களையும் ஏற்படுத்தின.
வெலிக்கடைச் சிறை
அவைக் குறித்து அடுத்த வாரம் விரிவாக நாம் பார்க்கலாம்.
(களங்கள்  தொடரும்)

அன்புடன்
சுப.வீரபாண்டியன்

பயன்பட்ட நூல்கள்
==================

பயன் பட்ட நூல்களின் விவரம், அடுத்த வார இறுதியில் தரப்படும்

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.