சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
வங்கக்கடலில் உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. அதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு அதற்கு, நிவர் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, நவம்பர் 25ம் தேதி மதியம் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கிறது. ஆகையால், தமிழகத்தில் வரும் 26ம் தேதி வரை, மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தாழ்வான பகுதிகளாகக் கண்டறியப்பட்ட 4,713 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு போதிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளில், மக்கள் முன்கூட்டியே உணவுப் பொருட்களை வாங்க ஏதுவாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.