டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏற்பட்டு வந்த இழப்பு வெகுவாக குறைந்துள்ளது. தற்போதைய நிலையில், உயிரிழப்பு 1.46% -ஆக குறைந்து இருப்பதாகவும், அதை 1 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
உலக நாடுகளையும், மக்களையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை குடித்துள்ளது. இந்தியாவிலும், இதுவரை 1லட்சத்து 33 ஆயிரத்து 738 பேரின் உயிரை காவு வாங்கி உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு இறப்பு விகிதம் (சி.எஃப்.ஆர்) ஞாயிற்றுக்கிழமை 1.46 சதவீதமாக குறைந்து இருப்பதாகவும், இது இந்திய அரசாங்கம் நிர்ணயித்த இலக்காக 1 சதவிகிதத்தை விரைவில் எட்டும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 44,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 91,39,866 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 511 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,33,738 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் தொற்று பாதிப்பில் இருந்து, 41,024 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 85,62,642 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக 4,43,486 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 25 லட்சத்து 82 ஆயிரத்து 730 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்றுமட்டும் 8,49,596 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
பொதுவான காய்ச்சல் காரணமாக ஆண்டுதோறும் நிகழும் இறப்புகளின் எண்ணிக்கையை மனதில் கொண்டு அரசாங்கம் இறப்பு விகிதத்தை 1 சதவீதமாக இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதன்படி நடப்பாண்டில் கொரோனா தொற்று காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. அதன்படி, நாட்டில், அதிகபட்ச எண்ணிக்கையிலான இறப்புகளை பத்து மாநிலங்கள் பதிவு செய்து உள்ளன. தலைநகர் டெல்லியில், கொரோனா காரணமாக நேற்று மட்டும் 121 இறப்புகள் டெல்லியில் பதிவாகியுள்ளன, வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,391 ஆக உள்ளது, இது நாடு முழுவதும் இருந்து பதிவான மொத்த புதிய இறப்புகளில் 22 சதவீததுக்கும் அதிகமாக உள்ளது. தொடர்ந்து மராட்டியம், மேற்குவங்காளம், உ.பி. மாநிலங்கள் உள்ளன.
இருந்தாலும் மொத்த கணக்கீட்டின்படி, நாடு முழுவதும் தொற்று பாதிப்பு காரணமாக ஏற்பட்டு வரும் உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது. தற்போதைய நிலையில் கொரோனா உயிரிழப்பு 1.46%ஆக குறைந்துள்ளதாகவும், விரைவில் 1 சதவிகிதமாக மேலும் குறையும் என சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது.