நாகை: நாகை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருடன் திமுக மூத்த நிர்வாகிகளான கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற்ற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து திமுக பிரசாரத்தை தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து நேற்று பயணம் தொடங்கினார். ஆனால், அவர் கொரோனா விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறியதாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுக்கப்பட்டார்.
இதையடுத்து, இன்று 2வது நாளாக நாகப்பட்டினத்தில் உள்ள அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் இருந்து தொடங்கினார். வீதியில் நடந்து சென்று மீனவ மக்களைச் சந்தித்து பேசியதுடன், அவருடன் கடலுக்குள் சென்று வந்தார்.
கரை திரும்பிய அவர் மீண்டும் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்க முற்பட்டபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருடன் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவாணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ் விஜயன், வேளாங்கண்ணி பேரூராட்சி முன்னாள் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்ட திமுக முன்னணிப் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.