மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்கு படமான “ஆச்சார்யா” வில் சிரஞ்சீவி, கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். (முதலில் கதாநாயகியாக நம்ம ஊர் திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார், பின்னர் விலகி விட்டார்). கொரட்டலா சிவா டைரக்டு செய்கிறார்.

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மீண்டும் தொடங்கியுள்ளது.

ஐதராபாத் பிலிம் சிட்டியில் நடைபெறும் படப்பிடிப்பில் விரைவில் சிரஞ்சீவி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக சிரஞ்சீவி நடிக்கிறார்.

வில்லன் வேடத்தில் நடிக்க பெரிய நட்சத்திரங்களை அணுகினர். ரஜினிகாந்த் நண்பர் மோகன்பாபுவிடமும் பேசப்பட்டது. அவர், “சிரஞ்சீவிக்கு உள்ள முக்கியத்துவம் தனக்கும் இருந்தால் நடிக்கிறேன்” என நிபந்தனை விதித்தார்.

ஆனால் படத்தின் தயாரிப்பாளரான ராம் சரண், இந்த நிபந்தனைக்கு உடன்பட வில்லை. இப்போது, ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவிக்கு வில்லனாக நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அரவிந்த்சாமி, ஏற்கனவே, ராம் சரண் கதாநாயகனாக நடித்த ‘துருவா’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ராம் சரண் நேரடியாக பேசி, அரவிந்த்சாமியை, தனது அப்பாவுக்கும் வில்லனாக்கியுள்ளார்.

– பா. பாரதி

[youtube-feed feed=1]