திருவண்ணாமலை: உலக பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது.
காலை 5.30 மணி முதல் காலை 7 மணி வரை 3ம் பிரகாரத்தில் உள்ள 64அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் இன்றி கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தீபத்திருவிழாவின் முதல்நாளான இன்று காலை 11 மணி அளவில் கோயில் 5வது பிரகாரத்தில் விநாயகர், சந்திரசேகர் பவனி நடக்கிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி கொடியேற்றத்திற்கு 3 நாட்களுக்கு முன் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி முதல்நாள் துர்க்கையம்மன், 2ம்நாள் பிடாரியம்மன் பவனி நடந்தது. 3ம் நாளான நேற்று, விநாயகர் உற்சவம் நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் பவனி வந்து அருள்பாலித்தார்.
இதையடுத்து இன்று காலை கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். தினசரி இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்தி பவனி நடக்கிறது. விழாவின் நிறைவாக, வரும் 29ம்தேதி 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சுவாமி வீதியுலாவை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அதனால், கோயில் ஊழியர்கள் மற்றும் திருப்பணியாளர்கள் மட்டுமே இதில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
https://www.youtube.com/watch?v=dguy_QF946s