டில்லி
இந்தியாவின் அண்டைநாடான பூட்டானில் ஒரு சிற்றூரை சீனா அமைத்ததால் கடும் பதட்டம் உண்டாகி உள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கடும் மோதல் போக்கு உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் குவிக்கப்பட்டதில் இருந்தே இந்த பதட்டம் நிலவி வருகிறது. அதன்பிறகு பேச்சு வார்த்தை நடந்ததில் அமைதி ஏற்பட்டது. ஆயினும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளைச் சீனா தொடர்ந்து நடத்தி வருகிறது.
மீண்டும் லடாக் எல்லையில் சீனபடைகள் குவிக்கப்பட்டதால் பதட்டம் உண்டாகி இந்தியாவும் தனது ராணுவத்தினரை அங்கு குவித்தது. பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து சீனப்படைகள் திரும்பி செல்வதாகக் கூறி விட்டு திடீர் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் மரணம் அடைந்ததால் நாடெங்கும் கடும் பதட்டம் நிலவி வருகிறது. வர்த்தக ரீதியாகச் சீனாவுடனான உறவை இந்தியா முறித்துக் கொண்டது.
இந்நிலையில் 2017ல் தாக்குதல் நடந்த டோக்லாம் எல்லையில் இருந்து 9 கிமீ தொலைவில் பூட்டான் எல்லைக்குள் ஒரு சிற்றூரைச் சீனா அமைத்துள்ளது. சுமார் 2 கிமீ பரப்பளவுள்ள இந்த சிற்றூரைப் பற்றி சீன ஊடகவியலர் டிவிட்டரில் தகவல்கள் வெளியிட்டுள்ளார். அந்த டிவீட்டுகள் அகற்றப்பட்டுள்ளது. ஆயினும் மற்றொரு சீன ஊடகவியலர் இந்த சிற்றூர் அமைந்துள்ள இடத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களைப் பலரும் மறுபகிர்வு செய்து வைரலாகி வருகிறது. இந்த செய்தி இந்தியாவில் கடும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனா ஒரு சிற்றூரை அமைப்பது குறித்து பூட்டான் அரசு எதுவும் கூற மறுத்துள்ளது.