டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உயிரிழந்த முன்கள வீரர்களின் வாரிசுகளுக்காக, மருத்துவப்படிப்பில் 5 எம்பிபிஎஸ்  இடங்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கடந்தமார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் களப்பணியாற்றி வருகின்றனர்.  இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பி காரணமாக இதுவரை 1,31,639 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மருத்துவர்கள் உள்பட முன்களப் பணியாளர்களும் அடங்குவர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போரில், முன்களத்தில் நின்று போராடி உயிரை நீத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், அவர்களது வாரிசுகளுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில், ஒதுக்கீ வழங்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி,   நாடு முழுவதும் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில், மத்திய அரசின் கீழ் இருக்கும் எம்பிபிஎஸ் மருத்துவ சேர்க்கை இடங்களில் 5 இடங்களை ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டு உளளது, இதற்காக உள் ஒதுக்கீட்டு முறையை உருவாக்க வழிகாட்டு நெறிமுறை அனுப்பப்பட்டுள்ளது.

சுயநலமின்றி, நாட்டுக்காக பணியாற்றிய மருத்துவ முன்களப் பணியாளர்களின் உயிர்தியாகத்தை கவுரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.