சென்னை: கால்நடை மருத்துவ படிப்புக்கான  தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் சுந்தர் 2வது இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் சென்னை நாமக்கல் திருநெல்வேலி ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவ கல்லுாரிகள் செயல்படுகின்றன இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு; நான்கு ஆண்டு உணவு பால்வளம் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் உள்ளன.

கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு 360 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் போக 306 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் உள்ளன. அதுபோல, பி.டெக். தொழில்நுட்ப படிப்புகளில் 100 இடங்களில் உணவு தொழில்நுட்ப இடங்களில் 6 இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்திற்கு போக 94 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் உள்ளன.

இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது.www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் 12 ஆயிரத்து 477; பி.டெக். படிப்புகளுக்கு 2940 மாணவர்களும் விண்ணப்பித்திருந்தனர். அவர்களின்   சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த 11 ஆயிரத்து 246 விண்ணப்பங்களும் பி.டெக். படிப்புகளுக்கு 2518 விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன

இதையடுத்து, கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமை செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.

பிவிஎஸ்சி-ஏஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்ட மாணவி எஸ்.விஷ்ணுமாயா நாயர் (கட்-ஆப்மதிப்பெண் – 199.25), சேலம் மாவட்ட மாணவர் ஜே.சுந்தர் (198.50), கோவை மாவட்ட மாணவி ஜி.கோகிலா (197.51) ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

பி.டெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் தருமபுரி மாவட்ட மாணவி எஸ்.சிவகனி (192), நாமக்கல் மாவட்ட மாணவி வி.பி.ரிதி (192), விழுப்புரம் மாவட்டமாணவி பி.நிவேதா (191.50) முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பெ.குமாரசாமி  “தரவரிசைப் பட்டியல் www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்ததும், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்படும். விரைவில் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படும்.

இந்தஆண்டு சேலம் தலைவாசல், தேனி வீரபாண்டி, உடுமலைப்பேட்டையில் தலா 40 இடங்களுடன் புதிதாக 3 கல்லூரிகள் செயல்படவுள்ளது. இந்த 120பிவிஎஸ்சி – ஏ.ஹெச் இடங்களுக்கும் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும்” என கூறினார்.