மும்பை :
பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி. 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆனால் 74 இடங்களில் வென்ற பா.ஜ.க. வெறும் 43 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற, தனது கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு முதல்-அமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டசபை தேர்தலிலிலும் இதே நிலை ஏற்பட்டது.
பா.ஜ.க 105 இடங்களிலும், அதன். கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. அப்போது சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க பா.ஜ.க.. மறுத்து விட்டது.
இதனால் காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-அமைச்சர் பதவியில் அமர்ந்தார்.
இந்நிலையில் சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’, பா.ஜ.க.,வின் இந்த நிலைப்பாட்டை, கடுமையாக விமர்சனம் செய்து தலையங்கம் தீட்டியுள்ளது.
“மகாராஷ்டிராவில் அதிக இடங்களில் வென்ற பா.ஜ.க., தனது கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு முதல்-அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்தது. ஆனால், பீகாரில் மூன்றாம் இடம் பிடித்த கட்சியின் தலைவரை முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர வைத்துள்ளது. என்னே பெருந்தன்மை? பா.ஜ.க.வின் இந்த தியாகத்தை பற்றி எழுத ஆரம்பித்தால், பேனாவில் மை வற்றி விடும்.” என ‘சாம்னா’ கிண்டல் செய்துள்ளது.
“மகாராஷ்டிர அரசை, சரத்பவார் வழி நடத்துவதாக இங்குள்ள பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் ஆளுநர் கோஷ்யாரி போன்றோர் விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் இனி, பீகார் அரசை யார் வழி நடத்துகிறார்கள் என்பதை உற்று நோக்கட்டும்” என்றும் சாம்னா எழுதியுள்ளது.
“பா.ஜ.க. ஆதரவில் நிதீஷ்குமார் இன்னும் எவ்வளவு காலம் ஆட்சியில் இருக்கப்போகிறார் என்பது தெரியவில்லை. ஒருவேளை அவர் வேறு வழியை எடுக்க நேரிடலாம்” என ‘சாம்னா’ தெரிவித்துள்ளது.
– பா. பாரதி