லண்டன்: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருக்கும் Pfizer நிறுவனம், தான் மேம்படுத்தியுள்ள தடுப்பு மருந்து 95% அளவிற்கு பலன் தருவதாக கூறியுள்ளதோடு, அம்மருந்து பாதுகாப்பானது மற்றும் வயதான நபர்களை மரணத்திலிருந்து காக்க வல்லது என்றும் தெரிவித்துள்ளது.
எனவே, இந்த தடுப்பு மருந்தை அவசரகாலப் பயன்பாட்டிற்கு அனுமதிக்கும்படி, அமெரிக்க மருத்துவத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
Pfizer என்ற இந்த அமெரிக்க நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக, ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனம் செயல்படுகிறது. ஒருவாரம் முன்பாகத்தான், இந்த 2 நிறுவனங்களும் இணைந்து, தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனையை முடித்திருந்தன. தற்போது, மிகக்குறுகிய காலக்கட்டத்திற்குள், தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கோரியுள்ளன.
அமெரிக்கா மட்டுமின்றி, ஐரோப்பா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகியவற்றின் மருத்துவத்துறை அதிகாரிகளிடமும் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், முழுமையான தரவுகளை வெளியிடுவதில்லை என்றும், தடுப்பு மருந்துகள் எத்தனை நாட்களுக்குப் பாதுகாப்பை அளிக்கும் மற்றும் மருந்துகளோடு வேறு ஏதேனும் பூஸ்டர்கள் தேவையா? என்பது குறித்த கேள்விகளுக்கு பதில்கள் தேவையாக உள்ளன என்று பொதுவெளியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த தடுப்பு மருந்துகள், தனி நிபுணர்களின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.