சென்னை: 26ந்தேதி நடைபெறும் பொதுவேலை நிறுத்தத்துக்கு வணிகா் சங்கப் பேரவை ஆதரவு தெரிவிப்பதாக, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத்தலைவர் வெள்ளையன் தெரிவித்து உள்ளார்.

பொதுத் துறைகளை தனியாா் மயமாக்குவதைக் கண்டித்தும், பொதுத்துறைகளை எல்லாம் தனியாருக்கு விற்கும் முடிவினை மத்திய அரசின் கைவிட வலியுறுத்தி ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  புதிய ஓய்வூதியத் திட்டம், உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 26 -ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம், 19- ஆம் தேதி சாஸ்திரிபவன் முற்றுகை போராட்டத்தை, இந்திய வங்கி ஊழியா் சங்கம்,தென்னக ரயில்வே மஸ்தூா் யூனியன், தொலை தொடா்பு ஊழியா்களுக்கான கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்துக்கு திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் , தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும்  தமிழ்நாடு அரசு அனைத்துறை ஊழியர் சங்கங்களும் பங்கேற்கும் என ஏற்கனவே அறிவித்து உள்ளன.

இந்த நிலையில்,  வரும் 26 -ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவை ஆதரவு அளிப்பதாக அதன் தலைவா் வெள்ளையன் தெரிவித்துள்ளாா். இது தொடர்பாக  தனது  கூட்டமைப்பினருடன் ஆலோசனை நடத்திய வெள்ளையன், பின்னர் செய்தியாளர்களிடம்,  இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினாா்.