பெங்களூரு
பெங்களூருவில் இருந்து 40 கிமீ தூரத்தில் உள்ள நலமங்களாவில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறியவர்கள் முகாமில் ஒரு சூடான் நாட்டவர் முதலில் குடியேறி உள்ளார்.
அனைத்து மாநில அரசுகளும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தங்க முகாம் அமைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த முகாம்கள் ஒரு சிறைச்சாலைக்குள் அமைந்திருக்கக் கூடாது, தடையில்லா மின்சாரம் குடிநீர், படுக்கைகள், குளியல் மற்றும் கழிப்பறைகள், உணவு, ஆண்களுக்கு மற்றும் தனி இடங்கள் ஆகியவை அமைந்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
அதையொட்டி கர்நாடக அரசு பெங்களூருவில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள நலமங்களா பகுதியில் உள்ள ஒரு சிற்றூரில் ஒரு முகாமை அமைத்துள்ளது. இந்த முகாம் உள்ள கட்டிடம் தலித், பழங்குடியினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் தங்கக் கட்டிய விடுதி ஆகும். ஆயினும் இப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுவதால் மாணவர்கள் சேராமல் காலியாக இருந்தது.
இந்த கட்டிடம் கடந்த 1992 ஆம் வருடம் கட்டப்பட்டதாகும். கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வரை இந்த முகாமில் யாரும் தங்காமல் இருந்துள்ளனர். இந்த முகாமில் சூரிய ஒளி விளக்குகள், குழாய்க் கிணறுகள், 2000 லிட்டர் தண்ணீர் தொடி, யுபிஎஸ் ஆகியவை உள்ளன. இங்கு முதல் முறையாக ஒரு சூடான் நாட்டவர் குடி அமர்த்தப்பட்டுள்ளார். இவருடைய விசா 2016 ஆம் வருடம் முடிவடைந்துள்ளது. ஆயினும் அவர் தொடர்ந்து இந்தியாவில் தங்கி உள்ளார். அவர் இந்த முகாமில் குடியேறு உள்ள முதல் நபர் ஆவார்.