சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை சென்ட்ரல் அருகே உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் 356வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருவது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை. இந்த மருத்துவமனை தொடங்கி 356 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனைக் கொண்டாடும் வகையில் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள், நர்சுகள் பரஸ்பரம் இனிப்புகளையும், வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அந்த மருத்துவமனையின் ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன், மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் தலைமையில் டாக்டர்கள் 356-வது ஆண்டை ‘கேக்’ வெட்டி கொண்டாடினர்.
இந்தியாவில் உள்ள பழமையான மருத்துவமனைகளில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஒன்றாகும். கடந்த 1664-ம் ஆண்டு நவம்பர் 16ந்தேதி, ஆங்கிலேய ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சர் எட்வர்ட் விண்டர் என்பவரால் சிறிய மருத்துவமனையாக ஜார்ஜ் கோட்டைக்குள் தொடங்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு, 1772ம் ஆண்டு அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு சென்டிரல் ரெயில் நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டது.
அதன் பின்னர், அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளராக வில்லியம் மார்டிமர் என்பவர் வந்தார். அவர், மருத்துவ உதவியாளர்களுக்கு உடற் கூறியல் தொடர்பான அடிப்படைக் கல்வி அவசியம் என்பதை உணர்ந்து, வீட்டிலேயே அவர்களுக்கு அதைப் பயிற்றுவித்தார். அதற்கு பிறகு அதனை முறைப்படுத்தி, சென்னை மருத்துவப் பள்ளி என்ற கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதில் ஐரோப்பியர்களுக்காகவும், இந்தியர்களுக்காகவும் தனித்தனியே இரு வகையான கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. அதை நிறைவு செய்தவர்கள் துணை மருத்துவர்களாகக் கருதப்பட்டனர். அதன் பின்னர், அங்கு பட்டப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதனிடையே சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் நீட்சியாக சென்னை மருத்துவப் பள்ளியை, கல்லூரியாக மாற்ற விண்ணப்பிக்கப்பட்டது. அது ஏற்கப்பட்டு, கடந்த 1850ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அக்கல்லூரி பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைக் கண்டு, தற்போது தேசிய அளவில் மிகப் பெரிய மருத்துவக் கல்வி நிறுவனமாக வேரூன்றி நிற்கிறது.
இத்தகைய நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தற்போது 42 துறைகளுடன் 680 மருத்துவர்கள், 1050 நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட படுக்கை வசதியுடன், ஆண்டுக்கு சராசரியாக 13 ஆயிரம் பேர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பல்வேறு சரித்திரங்கள் இந்த மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. உலகில் முறையாக பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர் இங்கு தான் படித்தார். இதைப்போல் உலகிலேயே 2-வது எக்ஸ்ரே யந்திரம் பொருத்தப்பட்டதும் இங்கு தான்.