சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில்,  பொது இடங்களில், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என  மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால்,  மழைக்காலத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக  மருத்துவர்கள் உள்பட ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளி, கைகழுவுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

ஆனால், “தீபாவளி போன்ற பண்டிகை விடுமுறை நாட்களில் கோயில்கள், மசூதிகள், தர்காக்கள் மற்றும் தேவாலயங்கள், உள்ளூர் சுற்றுலா தலங்கள் மற்றும் ஒகேனக்கல், வேளாங்கண்ணிபோன்ற  பகுதிகளில்,  பெரும்பாலான பொதுமக்கள் முகமூடி மற்றும் சமூக விலகல் எதுவும் காணப்படவில்லை.

இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்,  மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு வழக்குகள் குறைவாக இருப்பதால் மாவட்ட நிர்வாகங்கள், மீண்டும்   ‘கோவிட் பரவலுக்கு’ இடமளிக்கக்கூடாது.

மாநிலத்தில் பல பகுதிகளிலும் பொதுமக்கள் முகக்கவசம் மற்றும்  உடல் ரீதியான தூரத்திற்கு முற்றிலும் இணங்காத நிலை காணப்படுகிறது.

மாநிலத்தில் கொரோனா பரிசோதனை மற்றும் தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டு வரும் நிலையில்,  திருவிழாக்காலங்களை அடுத்த 14 முதல் 28 நாட்கள் மிக முக்கிய காலக்கட்டம் என்றதுடன்,  மீண்டும் தொற்று பரவலை தடுக்கும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் காரணமாக, மாநிலத்தில், பொதுமக்கள் கட்டாயம் முக்கவசம் அணிவதை கடுமையாக்க வேண்டும் என்றும், காவல்துறை, சுகாதாரம், வருவாய் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், முகக்கவசம் அணியாதவர்களிடம்  அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள்  சுய கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக அனைத்து மட்டங்களிலும், வர்த்தகர்கள் சங்கத்தின் கூட்டத்தை கூட்டி, தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், ஒரே பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட கொரோனா கேஸ்கள் காணப்பட்டால், அந்த பகுதியில்,  சோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சையளித்தல் மூலமாக கொரோனா கட்டுப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.