டில்லி

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணி ஆற்றிய எஸ் ஒய் குரேஷி நேற்று முன் தினம் நீதிபதி வி ஆர் கிருஷ்ண ஐயரின் பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்டார்.    அந்த விழாவில் குரேஷி உரையாற்றினார். அவர் தனது உரையில் தேர்தல் விதிகள் சீர்திருத்தம் குறித்துப் பேசி உள்ளார்.

குரேஷி, “தேர்தல் ஆணையம் ஒரு வலுவான மற்றும் எந்த சார்பும் இல்லாத ஒரு நடுவராகச் செயல்பட்டு வருகிறது.   ஆணையம் பல கூட்டங்களை நடத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு அளித்ததால் வாக்கு எண்ணிக்கை அதிகரித்ததுடன் தேர்தல் செலவுகளைக் கண்காணித்ததால் தேர்தலில் பணத்தைப் பயன்படுத்துவது குறைந்துள்ளது.

தற்போது குற்றவியல் வழக்கில் உள்ளவர்களில் பலர் தேர்தலில் வெற்றி  பெறுகின்றனர்.  அனைத்து கட்சிகளிலும் 30% முதல் 40% வேட்பாளர்கள் குற்றப் பின்னணியுடன் உள்ளனர்.  அவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே வெற்றி பெற்று விடுகின்றனர்.   இதனால் காவலர்களுக்கு அவர்கள் உத்தரவிடும் நிலை உள்ளது.

தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளையும் மறுபதிவு செய்யும் பணியைச் செய்ய அதிகாரம் அளிக்க வேண்டும்.  தற்போது பல அதிகாரமற்ற மற்றும் போலிக் கட்சிகள் உள்ளன.  இதன் மூலம் பெரிய கட்சிகளின் கருப்புப் பணம் வெள்ளைப்பணமாக மாற்றப்படுகிறது.    இதைத் தடை செய்ய வேண்டும்.

முக்கியமாகத் தேர்தல் கருத்துக் கணிப்புக்களைத் தடை செய்ய வேண்டும்.   வாக்காளர்கள் மத்தியில் இந்த கருத்துக் கணிப்புக்கள் தாக்கம் அளித்து அவர்கள் முடிவை மாற்றி விடுகிறது. பல கருத்துக் கணிப்புக்கள் ஒருதலை பட்சமாக உள்ளன.  இது வாக்காளர்களின் தனித்தன்மையை மிகவும் பாதிக்கிறது.

தற்போது வாக்குகள் மின்னணு இயந்திரத்தில் பதிவாகி அவை எண்ணப்படுகின்றன.  இதனால் இயந்திரத்தில் மோசடி என்னும் குரல் எழுந்து வருகிறது.  எனவே இதற்குப் பதிலாக வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரம் (விவிபிஏடி) இயந்திரத்தில் பதிவாகி உள்ள சீட்டுக்களை எண்ண வேண்டும்.

ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் பெற்றுள்ள வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.  கடந்த 2014 உபி சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மொத்தம் 20% வாக்குகளை பெற்றது.  ஆனால் ஒருவர் கூட  வெற்றி பெறவில்லை. இதன் மூலம் 20% வாக்கா:ளர்களுக்கு பிரதிநிதி இல்லாத நிலை உண்டானது” எனத் தெரிவித்துள்ளார்.