இஸ்லாமாபாத் :
பாகிஸ்தான் தாரிக்- இ- இன்சாப் என்ற கட்சியை ஆரம்பித்த இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்து வருகிறார். அவரது ஆட்சியை அகற்ற அங்குள்ள 11 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.
சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப்பின் மகள் மரியம் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று மாதங்கள் அவர் ஜெயிலில் இருந்தார்.
இப்போது, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் மரியம் தனது சிறை அனுபவங்கள் குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
“நான் இரண்டு முறை சிறைக்கு சென்றுள்ளேன். ஒரு வழக்கில், நான் வீட்டில் இருந்த போது எனது அறைக்கதவை உடைத்து என் தந்தையின் கண் முன்னால் கைது செய்தனர்” என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
“சிறையில் நான் இருந்த அறையில் காமிராவை பொருத்தி இருந்தனர்” என்று குறிப்பிட்ட மரியம் “அதுமட்டுமல்ல, சிறையில் இருந்த எனது குளியல் அறையிலும் காமிராவை பொருத்தி என்னை கண்காணித்தனர்” என்று குற்றம் சாட்டினார்.
“பாகிஸ்தானில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண ராணுவத்துடன் பேச நான் தயாராக இருக்கிறேன். அந்த பேச்சு வார்த்தை ரகசியமாக நடைபெறாது. மக்கள் எல்லோருக்கும் தெரியும் படியாகவே நடக்கும்” என்றும் மரியம் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
– பா. பாரதி