அடிலெய்டு: ஆஸ்திரேலியா – இந்தியா பங்கேற்கும் நீண்ட கிரிக்கெட் தொடரில், இருநாட்டு அணி வீரர்களும், வழக்கமான ஜெர்ஸிகளை தவிர்த்து, புதியவகை உடைகளை அணியவுள்ளனர்.
இந்திய – ஆஸி. அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் வரும் 27ம் தேதி துவங்குகிறது. இத்தொடரில், கடந்த 90களின் துவக்கத்தில் இந்திய அணியினர் அணிந்த கருநீல மற்றும் தோள்பட்டை கோடுகளைக் கொண்ட உடையை இந்திய அணி அணியவுள்ளது.
இந்தப் புதிய உடைக்காக எம்பிஎல் என்ற நிறுவனத்துடன், பிசிசிஐ, ரூ.120 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனம்தான், புதிய அமைப்பிலான உடையை வடிவமைத்துள்ளது.
இதேபோன்று ஆஸ்திரேலிய அணியும், தனது நாட்டு பூர்வகுடிகள், கிரிக்கெட்டிற்கு அளித்தப் பங்களிப்பை கெளரவிக்கும் வகையிலான புதிய ஜெர்ஸிகளை அணியவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதன்முதலில், ஆஸ்திரேலிய அணி, கடந்த 1868ம் ஆண்டில் வெளிநாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்தில் விளையாடியது. அப்போது ஆஸ்திரேலிய அணியில் பூர்வகுடியைச் சேர்ந்த மஸ்க்குயிட்டோ கோஜன் எனும் வீரர் இடம் பெற்றிருந்தார். மறைந்த அந்த வீரரின் நேரடி உறவினர்தான் இந்த ஆடையை உருவாக்கிய ஆன்ட்டி பியோனா கிளார்க் என்பது குறிப்பிடத்தக்கது.