மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியோடு, இந்திய அணி கேப்டன் நாடு திரும்புவது, அந்த அணிக்கு பாதிப்பாக அமையும் என்று கருத்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.

அவர் கூறியுள்ளதாவது, “விராத் கோலியை பல காரணங்களுக்காக என் வாழ்க்கையில் நான் கண்ட சிறந்த வீரராக கருதுகிறேன். தன்னுடைய குழந்தையின் பிறப்புக்காக விராத் கோலி இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வதற்காகவும் அவர் மீது அதிக மரியாதை கொள்கிறேன்.

நம் அனைவரையும் போலவே அவரும் ஒரு மனிதர். எனது வீரர்களுக்குக்கூட நான் அறிவுரை வழங்கியுள்ளேன். அப்போது அவர்களிடம் குழந்தைகளின் பிறப்பை ஒருபோதும் தவறவிடாதீர்கள் என்று நான் எப்போதும் கூறுவேன்.

ஏனென்றால் இது நீங்கள் செய்யும் மிகச்சிறந்த காரியங்களில் ஒன்றாகும். விராத் கோலி இல்லாததால் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது என் கருத்து. ஏனெனில், அவர் மிகச் சிறந்த வீரர்” என்றுள்ளார் அவர்.