ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், சர்னா என்ற ஆன்மீக கோட்பாட்டைப் பின்பற்றும் பழங்குடியினருக்கான தனி ‘சர்னா விதிமுறை’ ஐ நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான சட்டத்தை நிறைவேற்றியது ஜார்க்கண்ட் மாநில அரசு.
முதலமைச்சர் சிபுசோரன் கொண்டுவந்த இந்த தீர்மானம், ஜார்க்கண்ட் சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது. இதன்மூலம், அடுத்தாண்டு(2021) நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில், சர்னா கோட்பாடு என்ற பிரிவு சேர்க்கப்பட்டு, அதன்மூலமாக, அந்த மக்களின் எண்ணிக்கை அடையாளம் காணப்படும்.
சர்னா ஆன்மீக கோட்பாடு என்பது இயற்கையை கடவுளாக வழிபடுவதாகும். அந்தக் கோட்பாட்டை பின்பற்றுபவர்கள், தங்களை இந்துக்களாக கருதுவதில்லை. மேலும், தங்களுக்கான தனி மத அடையாளம் வேண்டுமென்று பல பத்தாண்டுகளாக போராடி வருகிறார்கள்.
தற்போதைய நிலையில், அவர்கள் தனி மதக் குழுவினராக கருதப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான கோரிக்கைகளை மாநிலமெங்கும் பல பழங்குடியின தலைவர்கள் முன்வைத்து வந்தனர்.
இந்த நெருக்குதலையடுத்தே, மாநில அரசு இந்தப் புதிய விதிமுறைக்கான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. தற்போதைய நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பில் சர்னா கோட்பாளர்கள், மதம் என்ற அடையாளத்தில் ‘மற்றவை’ என்ற வகைப்பாட்டிலேயே சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.