விழுப்புரம்: பிரசித்தி பெற்ற விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாககோவில் ஆணையர் அறிவித்து உள்ளார்.
விழுப்புரம் மாவட்ட மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம், அங்குள்ள உற்சவ அம்மஙுன பம்பை, மேளம், முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டுவரப்பட்டு உஞ்சலில் அமர்ந்து முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்த ஊஞ்சல் விழாவை கண்டு, அம்மனிடம் ஆசிகள் பெற பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு வந்து அம்மனின் அருள் பெற்று செல்வர்.
ஆனால், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த 7 மாதங்களாக அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் ரத்துசெய்யப்பட்டு வருகிறத. அதைத்தொடர்ந்து, நாளை நடைபெற உள்ள அம்மாவாசை ஊஞ்சல் உற்சவமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவிலின் உதவி ஆணையர் மேல்மலையனூர் ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணத்தால் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வருகின்ற 14–ந் தேதி சனிக்கிழமை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் அன்றைய தினம் அங்காளம்மன் கோவிலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனைத்து வகையான தரிசனங்களும் தடை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என திருக்கோவில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.