வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் செய்யப்படும் பெரிய மாற்றங்களுக்கு மத்தியிலும், தனது அரசியலமைப்பு விசுவாசத்தில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார் அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளபதியான மார்க் மில்லே.
சமீபத்தில், பாதுகாப்புத் துறை செயலர் உள்ளிட்ட பென்டகனின் மூத்த அதிகாரிகளை மாற்றி அதிர்ச்சியளித்தார் டிரம்ப். ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடக்கிறதா? என்ற தகவல்களும் வெளியாகின.
இந்நிலையில் பேசியுள்ள அந்நாட்டின் முக்கிய ராணுவ தளபதியான மார்க் மில்யே, “உலக ராணுவங்களில் நாங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். நாங்கள் ஒரு அரசருக்கோ அல்லது அரசிக்கோ அல்லது ஒரு சர்வாதிகாரிக்கோ அல்லது தனிமனிதனுக்கோ விசுவாசமாக இருக்க உறுதியேற்கவில்லை.
நாங்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கோ, இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ விசுவாசமாய் இருக்க உறுதியேற்கவில்லை. நாங்கள், அமெரிக்க அரசியலமைப்பிற்கு விசுவாசமாக இருக்கவே உறுதியேற்றுள்ளோம்.
எனவே, அமெரிக்க ராணுவத்தின் ஒவ்வொரு தரைப்படை வீரரும், கப்பற்படை வீரரும் மற்றும் விமானப்படை வீரரும் அந்த அரசியல் சாசனத்தை பாதுகாப்போம். எங்களுக்கான எந்த தனிப்பட்ட அபிலாஷைகளும் அதுதொடர்பாக கிடையாது” என்றுள்ளார் அவர்.
அந்த தளபதியின் பேச்சானது, அமெரிக்காவில் மட்டுமின்றி, உலகளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.