புதுடெல்லி: மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பெற்று உயிர்பிழைத்து வீடு திரும்பிய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ், மீண்டும் கோல்ஃப் விளையாடினார்.
இந்திய அணிக்கு, முதன்முதலாக கடந்த 1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று தந்தவர் கபில்தேவ். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் கபில்தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 62 வயதாகும் கபில்தேவ், திடீர் மாரடைப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ‘ஆன்ஜியோபிளாஸ்டிக்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, கோல்ஃப் விளையாடுவதை வழக்கமாக்கி கொண்டார் கபில்தேவ்.
இந்நிலையில், தான் மீண்டும் கோல்ஃப் மைதானத்திற்கு வந்துவிட்டதை பறைசாற்றும் வகையில், கோல்ஃப் ஆடுவது போன்ற ஒரு படத்தை வெளியிட்டு, தனது ரசிகர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார் கபில்தேவ்.
தனது குணமடைதலுக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு, ஏற்கனவே நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் கபில்தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.