மும்பை
இந்த வருட ஜூலை – செப்டம்பர் கால கட்டத்தில் 8.6% ஜிடிபி குறைவால் இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையை அடைய உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த மார்ச் முதல் இந்தியாவில் முழு அடைப்பு அமலில் உள்ளது. இதனால் அனைத்து உற்பத்தியும் முழுமையாக நின்று போனது. தற்போது ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் தொழிலகங்கள் சிறிது சிறிதாக இயங்கத் தொடங்கி உள்ளன.
கடந்த இரு காலாண்டுகளாக ஊரடங்கின் பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர், “கடந்த ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவிகிதம் சுருங்கக்கூடும், அதாவது இந்த நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக மந்தநிலைக்குள் நுழையும். கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு தொடர்ச்சியான காலாண்டு எதிர்மறை வளர்ச்சியால் இந்நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் மாதாந்திர அறிக்கை குறித்து நேற்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் ஆய்வாளர் பங்கஜ் குமார், ”கொரோனா தொற்று நோய் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23.9 சதவிகிதம் குறையச் செய்தன.
மேலும் இந்த முழு நிதியாண்டில் பொருளாதாரம் 9.5 சதவீதம் சுருங்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்த 2020-21 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியா ஒரு தொழில்நுட்ப மந்தநிலையை அதன் வரலாற்றில் முதல் முறையாக அடைய உள்ளது. ” என்று குறிப்பிட்டுள்ளார்
ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வெளியீடு இன்னும் வராத நிலையில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு இந்த மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது.
அதே வேளையில் கொரோனா தொற்று கடுமையாக இருந்த போதிலும் இந்த ஆரம்பக் கால மதிப்பீடுகள் ஜூன் – செப்டம்பர் வரையிலான காலாண்டில் உள்நாட்டு உற்பத்தியில் வீட்டு நிதி சேமிப்பு 21.4 சதவீதமாக உயர்ந்துள்ளன என்பதைக் காட்டுகிறது, இது ஜூன் 2019 வரையிலான காலாண்டில் 7.9 சதவீதமாகவும், மார்ச் 2020க்கு முந்தைய காலாண்டில் 10 சதவீதமாகவும் இருந்தது.
இதற்குக் கட்டாய சேமிப்பில் தேக்க நிலை மற்றும் வருமான குறைவு ஆகியவை காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி சேமிப்பில் முன்னெச்சரிக்கை அதிகரித்துள்ளதாகவும் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் கடன் மற்றும் வைப்புத் தொகைகளுக்கு இடையிலான வட்டி விகிதம் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதுவும் வீட்டு நிதி சேமிப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் காரணம் கூறப்படுகிறது