மும்பை :
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர், மாதம் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மத்திய அரசால் ஒழிக்கப்பட்டன. இதன் நான்காம் ஆண்டு நிறைவை அண்மையில் பா.ஜ.க.வினர் விழாவாக கொண்டாடி உள்ளனர்.
பண மதிப்பிழப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி “பண மதிப்பிழப்பால் நாட்டில் இருந்து கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
இதற்கு மகாராஷ்டிர மாநில ஆளுங்கட்சியான சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த கட்சியின் பத்திரிகையான “சாம்னா”வில் நேற்று தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. “பண மதிப்பிழப்பால் ஏராளமானோர் வேலை இழந்தனர். வியாபாரிகள், பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். இன்னும் பலர் தற்கொலையும் செய்து கொண்டனர்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பண மதிப்பிழப்பை கொண்டாடுவது, இவ்வாறு உயிரை துறந்தவர்கள் புதைக்கப்பட்டுள்ள கல்லறையில் பிறந்த நாள் ‘கேக்’ வெட்டி கொண்டாடுவதற்கு சமமானது” என சிவசேனாவின் ‘சாம்னா’ விமர்சனம் செய்துள்ளது.
– பா. பாரதி