பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றுள்ள நிலையில், பாரதீய ஜனதாவை விட இடங்கள் குறைவாகப் பெற்றாலும், முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமாருக்கே பாரதீய ஜனதா விட்டுத்தரும் என்று கூறப்படுவதால், அவர் பீகார் முதல்வராக 7வது முறையாக பதவியேற்கவுள்ளார் என்ற உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
* கடந்த 2000ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி ஒன்றுபட்ட பீகார் முதல்வராக முதன்முறை பதவியேற்ற நிதிஷ்குமார், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தால், ஒரே வாரத்தில் பதவி விலகினார்.
* பின்னர் 2005ம் ஆண்டு, நவம்பர் 24ம் தேதி இரண்டாவது முறையாக பீகார் முதல்வர் பதவியேற்று 5 ஆண்டுகாலம் பதவியில் இருந்தார்.
* அதன்பிறகு, 2010ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மூன்றாவது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார். ஆனால், மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து 2014ம் ஆண்டில் பதவி விலகினார்.
* பின்னர், 9 மாதங்கள் கழித்து 2015ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி, நான்காவது முறையாக பீகார் முதல்வராகப் பதவியேற்றார்.
* அதன்பிறகு, லாலுவின் கட்சியான ஆர்ஜேடி கட்சியுடன் கூட்டணி அமைத்து, 2015ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி, ஐந்தாவது முறையாக பீகார் முதல்வராகப் பதவியேற்றார்.
* ஆனால், கூட்டணியில் விரிசல் உண்டாகி, 2017ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார். ஆனால், ஒருசில நாட்களிலேயே பாரதீய ஜனதா ஆதரவுடன் ஆறாவது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்று, முழு பதவிகாலத்தையும் நிறைவு செய்தார்.
* தற்போது, பாரதீய ஜனதா கூட்டணியில் வெற்றி பெற்றிருப்பதால், பீகார் முதல்வராக ஏழாவது முறை பதவியேற்கவுள்ளார் நிதிஷ்குமார்.