டில்லி
உலகின் முதல் கொரோனா தடுப்பூசி குறித்து ஆசிய நாடுகள் ஆர்வம் காட்டாமல் உள்ளது குறித்த ஒரு ஆய்வு இதோ
நேற்று உலகின் முதல் கொரோனா தடுப்பூசி சோதனைகள் முடிந்து ஒப்புதலுக்குத் தயாராக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த தடுப்பூசியை பிஃபைஸர் நிறுவனம் நிறுவனம் மற்றும் பயாண்டெக் எஸ் இ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த தடுப்பூசி சோதனையில் 90% பாதுகாப்பானது என தெரிய வந்துள்ளது. இந்த தகவல் பல நாடுகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தற்போதைய நிலையில் உலக மக்களில் சுமார் 70% பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி தேவை என்னும் நிலையில் உள்ளது. குறிப்பாக ஆசியாவில் மட்டும் 4600 கோடி அதாவது உலக மக்கள் தொகையில் 5 இல் மூவருக்குத் தேவை என்னும் நிலை உள்ளது. ஆயினும் ஆசிய நாடுகளில் இந்த தடுப்பூசி குறித்து அதிகம் ஆர்வம் எழவில்லை என்பதே உண்மையாகும்.
இதற்கு முக்கிய காரணம் இந்த மருந்தைச் சேமித்து வைக்க மைனஸ் 70 டிகிரி வெப்பம் கொண்ட குளிர்சாதனப் பெட்டிகள் தேவைப்படுகின்றன. ஆசியாவைப் பொருத்தவரை இது போன்ற சாதனங்கள் மிக மிக அரிதான ஒன்றாகும். ஆசியாவில் மட்டுமின்றி ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் அதிக வெப்பம் உள்ள நாடுகள் ஆகும்.
இந்த நிலை உலகின் பெரும்பாலான பகுதிகளில் நிலவுகிறது. பெரும்பாலான ஆசிய நாடுகள் கொரோனா தடுப்பூசி தேவைப்படும் அளவுக்கு அவற்றைச் சேமிக்க தேவையான உள்கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை. குறிப்பாக பிஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியில் உள்ள ஆர் என் ஏ டெக்னாலஜிக்கு இந்த உஷ்ணம் தேவை என்பதால் மாற்றுத் தொழில்நுட்பத்தை இந்நாடுகள் எதிர்பார்க்கின்றன.
பிஃபைசர் நிறுவனம் இந்த மருந்து போக்குவரத்துக்காகச் சிறப்பு விமானங்களை அமைத்துள்ளதாகவும் இதன் மூலம் உலகின் எந்த பகுதிக்கும் அனுப்ப முடியும் எனவும் அறிவித்துள்ளது. ஆயினும் செல்வச் செழிப்புள்ள ஆசிய நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளும் இதைக் கொள்முதல் செய்யத் தயங்கின.
தற்போதைய தகவலின்படி ஜப்பான் இந்த மருந்து 12 கோடி டோஸ்கள் வாங்க ஒப்பந்தம் இட்டுள்ளது. ஆஸ்திரேலியா 1 கோடி டோஸ்களும் ஹாங்காங் மற்றும் மகாவ் பகுதிகளுக்காகச் சீனாவின் ஃபோசன் நிறுவனம் 1 கோடி டோஸ்கள் கொள்முதல் செய்ய உள்ளது.
டோக்கியோ நகரத்தில் உள்ள செயிண்ட் லூக்ஸ் சர்வதேச மருத்துவமனை அதிகாரி ஃபூமி சகமோடோ, “இந்த மருந்துகளை சேமித்து வைப்பது பெரிய சவாலாக விளங்கும். அரசு இதற்கான உபகரணங்களை வழங்குமா என தெரியவில்லை. ஜப்பானில் இது போன்ற குளிர் சாதன பெட்டிகள் புழக்கத்தில் இல்லை.” எனக் கவலை தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளில் இந்த தடுப்பூசி செயல்பாட்டை முதலில் கண்காணித்து விட்டு பிறகு கொள்முதல் செய்ய உத்தேசித்துள்ளதாக தென் கொரியா கூறி உள்ளது. சமீபத்தில் இந்நாட்டில் 50 லட்சம் டோஸ்கள் ஃப்ளூ தடுப்பூசி சரியான உஷ்ணத்தில் சேமிக்காததால் கெட்டுப் போனது.
மேலும் வியட்நாம் போன்ற சில ஆசிய நாடுகள் வெற்றிகரமாக கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால் தற்போது உடனடியாக கொரானா தடுப்பூசியைக் கொள்முதல் செய்யத் தேவை இல்லை என்னும் மன நிலையில் உள்ளன.