டெல்லி: கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகளில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வரும் நிலையில், இந்தியாவில் உண்மையான கொரோனா முழுமையாக கிடைக்க மேலும் பல மாதங்கள் ஆகலாம் என்றும், 2022ல்தான் அனைவருக்கும் முழுமையான கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என எய்ம்ஸ் இயக்குநரும், மேலாண்மை தொடர்பான தேசிய பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
உலக அளவில் , அதிக அளவிலான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதே வேளையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியிலும் இந்தியாவும் தீவிரம் காட்டி வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக அளவில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நமது நாட்டிலும் 8 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களுக்கு நமது அரசாங்கமும் உதவி வருகிறது. ஆனால், பெரும்பாலான மருந்துகள் மனித சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. இதையடுத்து ஜனவரியில் தடுப்பூசி நடைமுறைக்கு வந்துவிடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இருந்தாலும், ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் அடுத்த ஆண்டு ஜூனுக்கு பிறகே தடுப்பூசி நடைமுறை வரும் என்றும், வேறு சிலரோ முழுமையான சோதனைகள் முடிய மேலும் பல மாதங்கள் ஆகலாம் என்று தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், ஒரே ஒருமுறை தடுப்பூசி போட்டால் போதுமா, அல்லது இரண்டு அல்லது 3 முறை தடுப்பூசி எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமானா என்பது குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற ஆராய்ச்சிகள் முடிய மேலும் சில ஆண்டுகள் ஆகலாம் என தெரிகிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு (Corona Virus) எதிரான முழுமையான தடுப்பூசி இந்திய சந்தையை அடைய மேலும் ஒருவருடத்திற்கு மேல் ஆகலாம் என்றும எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் குலேரியா தெரிவித்துள்ளார். மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில், இதுபோன்ற தடுப்பூசிகளை சேமித்து வைத்து அதை பொதுமக்களுக்கு வழங்க சரியான திட்டமிடல் வேண்டும் என்பதுடன், இந்த தடுப்பூசியை அனைவருக்கு கிடைக்கும் வகையில், அதை சந்தைப்படுத்தவும் கால அவகாசம் தேவை என்றவர், இவைகள் அனைத்தும் சாத்தியமாக 2021ம் ஆண்டின் இறுதி அல்லது 2022ம் ஆண்டின் தொடக்கத்திலேயே சாத்தியமாகும் என்றும் தெரிவித்து உள்ளார்.
மேலும், கொரோனா தொற்று பாதிப்பு குளிர்காலங்களில் அதிகரிக்கும் என்று கூறியவர், தற்போது டெல்லியில் குளிர் காலம் தொடங்கியுள்ளது. எனவே காற்றில் வைரஸ் அதிக நேரம் உயிர்வாழ அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுமட்டுமின்றி, காற்று மாசுபாடுவும் தொற்று அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.