இந்த கொரோனா காலகட்டம், மனிதகுலத்திற்கு மிகவும் சவாலானது. உலகெங்கிலும் பல்வேறு வகையான மக்கள் இந்தப் புதிய வைரஸை எதிர்த்து கடுமையாக போரிட்டுக் கொண்டுள்ளார்கள்.
விஞ்ஞானிகள், மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருடன், காவல்துறையினரும்கூட இந்தப் பணியில் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை அறிவோம். ஆனால், இவர்களோடு இணைந்து, மற்றொரு பிரிவினரும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் கடுமையாக உழைத்துக் கொண்டுள்ளார்கள்.
ஆனால், அவர்கள் குறித்து அதிகம் வெளியுலகில் அறியப்படுவதில்லை மற்றும் அவர்களுடைய உழைப்பிற்கான அங்கீகாரமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. மைக்ரோபயாலஜிஸ்டுகள்தான் அந்தக் குழுவினர்.
ஒருவருக்கு தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பதைக் கண்டறியும் மாபெரும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மைக்ரோபயாலஜிஸ்டுகள் இல்லையெனில், கொரோனா வைரஸுக்கு எதிரான நமது அனைத்துப் போராட்டங்களும் தோல்விதான் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோபயாலஜிஸ்டுகள் சாதாரண நாட்களில் பரிசோதனை மேற்கொள்வதும், இந்த கொரோனா காலக்கட்டத்தில் பரிசோதனை மேற்கொள்வதும் பெரிதும் வேறுபட்டவை. அவர்கள் பொதுவாக, காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை பணியாற்றுவார்கள்.
ஆனால், இப்போதோ நிலைமையே வேறு. மொத்தம் 3 ஷிப்டுகளாகப் பிரிந்து இடைவிடாமல் பணியாற்றுகிறார்கள். கொரோனா தொற்றை சரியான முறையில் கணிக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்வது மிகவும் சவாலானது.
இந்தப் பரிசோதனை, தற்போது ஒருநாளைக்கு 2000 தடவைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு, ஒருநாளில் அதிகபட்சமாக 1000 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்படியான அதிகபட்ச பரிசோதனையில், மைக்ரோபயாலஜிஸ்டுகளுக்கு ஏற்படும் மனஅழுத்தம் மிக மிக அதிகம். ஏனெனில், அவர்களுக்குப் பொதுவாக பாக்டீரியாக்கள் நன்கு அறிமுகமான ஒன்று. மேலும், டெங்கு பரிசோதனை மற்றும் எச்ஐவி பரிசோதனை போன்றவையும்கூட பரிச்சயம்.
ஆனால், இதுவரை உலகில் அறியப்படாத ஒரு வைரஸ்(கொரோனா) தொற்றியுள்ளதாக என்பதைக் கண்டறிந்து, அதன் இருப்பை அறிவது மிகவும் சவாலான ஒன்றாகும். இந்த சவாலைத்தான் இன்றைய நெருக்கடியான சூழலில் அந்த மைக்ரோபயாலஜிஸ்டுகள் எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே, அவர்களுக்கான நமது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்க வேண்டியது கட்டாயம்!