சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வு, சென்னை எண்ணூரிலுள்ள காமராஜர் துறைமுகம், எண்ணூர் கடற்கழியில் சூழலியல் சீர்கேட்டை ஏற்படுத்தியதற்காக, ரூ.4 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா அடங்கிய அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையை 2 மாத காலத்திற்குள் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஜனவரி 20ம் தேதி, காமராஜர் துறைமுகத்திற்கு ரூ.8.35 கோடிகள் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், இத்தீர்ப்பை திருத்த வேண்டுமென முறையிட்டிருந்தது காமராஜர் துறைமுக நிர்வாகம். எனவே, அத்தொகை ரூ.4 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
“எண்ணூர் கடற்கழி பகுதியில் மாங்குரோவ் காடுகளின் அழிவானது, சுற்றுச்சூழலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே, அந்த பாதிப்பிற்கு காரணமான நபர்தான்(காமராஜர் துறைமுகம்) இழப்பீட்டை செலுத்த வேண்டும்” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அப்பகுதியிலுள்ள மண்ணில் மக்னீசியம், அலுமினியம், இரும்பு, பொட்டாசியம், குரோமியம், ஈயம் மற்றும் கால்சியம் போன்றவை கலந்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.